உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மலையில் தொடரும் கனமழை காரணமாக... இலை வரத்து அதிகம்!தொழிலாளர் பற்றாக்குறையால் பறிப்பதில் சுணக்கம்

மலையில் தொடரும் கனமழை காரணமாக... இலை வரத்து அதிகம்!தொழிலாளர் பற்றாக்குறையால் பறிப்பதில் சுணக்கம்

கோத்தகிரி:நீலகிரி மாவட்டத்தில் பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், அறுவடைக்கு தயாரான பசுந்தேயிலை பறிக்கும் பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில், 65 ஆயிரம் சிறு, குறு விவசாயிகள் தேயிலை பயிரிட்டு பராமரித்து வருகின்றனர். இத்தொழிலை, இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நம்பியுள்ளனர். இந்நிலையில், தென்மேற்கு பருவ மழை கடந்த மாதம் துவங்கிய நிலையில், கடத்த சில நாட்களாக தீவிரமடைந்து வருகிறது. காலை முதல், இரவு வரை மழை பொழிவு தொடர்வதால், விவசாயிகள் பசுந்தேயிலையை பறிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், அறுவடைக்கு தயாரான பசுந்தேயிலை தோட்டத்திலேயே முதிர்ந்து, 'கரட்டு' இலையாக மாறி வருகிறது.

விவசாயிகளுக்கு இழப்பு

கோத்தகிரி மற்றும் குன்னுார் பகுதிகளில் மழை அளவு குறைந்து காணப்பட்டாலும், ஊட்டி, குந்தா, கூடலுார், பந்தலுார், நடுவட்டம் மற்றும் துானேரி உள்ளிட்ட பகுதிகளில் மழை தீவிரம் அடைந்து வருகிறது. இதனால், இப்பகுதிகளில் பசுந்தேயிலை பறிப்பதில் சுணக்கம் நீடிக்கிறது. தற்போது ஒரு கிலோ பசுந்தேயிலைக்கு, 15 முதல் 18 ரூபாய் வரை விலை கிடைக்கிறது. இந்த விலை போதுமானதாக இல்லை. இதனால், விவசாயிகளுக்கு இழப்பு தொடருகிறது.

இடு பொருட்களின் விலை உயர்வு

தேயிலை தோட்டங் களுக்கு, ஆண்டுக்கு இருமுறை, உரமிட்டு பராமரித்தால் மட்டுமே, கூடுதல் மகசூல் கிடைக்கும். ஆனால், 'அம்மோனியம், யூரியாபேஸ்' உள்ளிட்ட உரங்களுக்கு, கடந்த ஆண்டை காட்டிலும், இருமடங்கு விலை அதிகரித்துள்ளது. இதனால், தோட்டங்களுக்கு உரமிட, விவசாயிகள் கடன் பெறவேண்டிய நிலை உள்ளது. ஏற்கனவே விலை வீழ்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு, மேக மூட்டமான காலநிலை அச்சுறுத்தி வருகிறது. தற்போது தோட்டங்களில் 'கொப்புள' நோயின் தாக்கம் அதிகரித்து வருகிறது.

போராட்டம் நடத்த முடிவு

மலை மாவட்ட சிறு விவசாயிகள் சங்கத் தலைவர் தும்பூர் போஜன் கூறியதாவது: மழை காரணமாக பசுந்தேயிலை பறிக்க முடியாததால், இலை முதிர்ந்து விடுகிறது. கடந்த வாரம், ஒரு கிலோ பசுந்தேயிலைக்கு, 18 ரூபாய் விலை கிடைத்து வந்தது. இந்த வாரம், 2 ரூபாய் குறைந்து, 16 ரூபாய் மட்டுமே விலை கிடைக்கிறது. சில தொழிற்சாலைகளில், 2 ரூபாய் குறைத்து, 14 ரூபாய் மட்டுமே விலை தருகின்றனர். சில தொழிற்சாலைகளில் இன்னும் தேயிலை துாளில் கலப்படம் செய்கின்றனர். இதனை துறை அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் உள்ளனர்.பல போராட்டங்களை நடத்தியும், தேயிலை வாரியம் மற்றும் மத்திய மாநில அரசுகள் செவி சாய்க்கவில்லை. இதனால், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட அரசு, விவசாயிகளுக்கு மானியம் அறிவிக்க வேண்டும். தேயிலை பிரச்னைக்கு தீர்வு கிடைக்காத பட்சத்தில், கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி