கூடலுார்: கூடலுார் புத்துார்வயல் அருகே நாட்டு துப்பாக்கியால் சுட்டு விவசாயி தற்கொலை செய்து கொண்டார். கூடலுார் புத்துார்வயல் அருகே, வடவயல் பகுதியை சேர்ந்தவர் குட்டிகிருஷ்ணன், 48. இவரின் தந்தை சமீபத்தில் உயிரிழந்தார். அவருக்கு, இன்று, 10ம் நாள் சடங்குகள் நடைபெற இருந்தது. இந்நிலையில், குட்டிகிருஷ்ணனுக்கும், அவரின் மனைவிக்கும் நேற்று முன்தினம் தகராறு ஏற்பட்டுள்ளது. மனைவி இரண்டு பிள்ளைகளை அழைத்து கொண்டு, சகோதரி வீட்டுக்கு சென்று விட்டார். குட்டிகிருஷ்ணன் அங்கு சென்று மனைவியை அழைத்துள்ளார். அவர், அவருடன் வரவில்லை. இதனால், குட்டிகிருஷ்ணன் தன் வீட்டுக்கு வந்து தனியாக தங்கி உள்ளார். நேற்று காலை, அவரின் மைத்துனர் வீட்டுக்கு வந்து பார்த்த போது, முன் அறை இருக்கையில் நாட்டு துப்பாக்கியுடன் அமர்ந்தபடி முகத்தில்பலத்த காயத்துடன் இறந்து கிடந்தது தெரியவந்தது. தகவலின் பேரில், கூடலுார் டி.எஸ்.பி., வசந்தகுமார், இன்ஸ்பெக்டர் ராஜேந்திர பிரசாத், எஸ்.ஐ., கவியரசு மற்றும் போலீசார் அப்பகுதிக்கு வந்து ஆய்வு செய்தனர். ஆய்வில் குட்டி கிருஷ்ணன், நாட்டு துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டது உறுதியானது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். போலீசார் கூகையில், 'முதல் கட்ட விசாரணையில், குடும்ப பிரச்னை காரணமாக அவர் தற்கொலை செய்திருக்க வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது. அவர் தற்கொலை செய்ய பயன்படுத்திய துப்பாக்கி குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம். இறந்த குட்டிகிருஷ்ணனுக்கும், ஊட்டி அருகே நடந்த 2 வனவிலங்கு வேட்டைக்கும் தொடர்பு உள்ளதாகவும் தெரிய வந்தால், தொடர் விசாரணை நடந்து வருகிறது,' என்றனர்.