உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / தீவனமின்றி செத்து மடியும் கால்நடைகள் காவு கேட்கும் வறட்சி...!விவசாயிகளின் கண்ணீரை துடைக்க யாருமில்லை

தீவனமின்றி செத்து மடியும் கால்நடைகள் காவு கேட்கும் வறட்சி...!விவசாயிகளின் கண்ணீரை துடைக்க யாருமில்லை

கூடலுார்:முதுமலை மசினகுடி பகுதியில் வறட்சியின் தாக்கத்தால் தீவனமின்றி வளர்ப்பு மாடுகள், எருமைகள் உயிரிழந்து வருவதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.முதுமலை புலிகள் காப்பகம், மசினகுடி, மாயார், பொக்காபுரம், மாவனல்லா, வாழை தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில், விவசாயிகள் காய்கறி உற்பத்தியுடன் நாட்டு மாடுகள் மற்றும் எருமைகள் வளர்ப்பதிலும் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு, 5,000 நாட்டு மாடுகள், நுாற்றுக்கணக்கான எருமைகள் வளர்க்கப்படுகிறது. குடியிருப்பை ஒட்டிய வனப்பகுதி மற்றும் அரசு நிலங்களில் மாடுகளை மேய்ச்சலுக்கு விடுகின்றனர்.இவைகள் மூலம் சீசன் காலத்தில், 1,500 முதல் 2,000 லிட்டர் வரை பால் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யும் பாலின் பெரும்பகுதி மசினகுடி பால் உற்பத்தியாளர் சங்கத்துக்கு வழங்கப்பட்டு வருகிறது.

வறட்சியின் ஆட்சி

இந்நிலையில், கடந்த ஆண்டு பருவமழை ஏமாற்றிய நிலையில், நடப்பாண்டு கோடை மழையும் ஏமாற்றி வருவதால், வறட்சியின் தாக்கம் அதிகரித்து வனவிலங்குகளுக்கு உணவு, குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தாவரங்கள், புற்கள் கருகி வளர்ப்பு மாடுகளுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இவைகளின் உணவு தேவை பூர்த்தி செய்ய சமவெளி பகுதியில் இருந்து எடுத்து வரப்படும் வைக்கோலை விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர். எனினும், மாடுகளுக்கு போதுமான உணவு கிடைக்காததால், பால் உற்பத்தி, 300 லிட்டருக்கு குறைந்து வருவாய் இழப்பை அவர்கள் சந்தித்து வருகின்றனர்.

கால்நடைகள் உயிரிழப்பு

இந்நிலையில், தொடரும் வறட்சியினால், வளர்ப்பு மாடுகளுக்கு போதுமான உணவு கிடைக்காமல், பலவீனமடைந்து உயிரிழந்து வருவதால் விவசாயிகள் கண்ணீர் விட்டு வருகின்றனர். தங்களுடன் குடும்ப உறுப்பினர்களாக வளர்ந்த கால்நடைகள், உணவு கிடைக்காமல் இறந்த துயரத்துடன், இறந்த காலந்டைகளின் உடல்களை, அங்குள்ள கல்குவாரியில் இட்டு செல்கின்றனர். அப்பகுதியில் இதுவரை, 50 மாடுகள் வரை இறந்துள்ளன.விவசாயிகள் கூறுகையில், 'நடப்பு ஆண்டு தொடரும் வறட்சியால், பால் உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், பசுந்தீவனங்கள் கிடைக்காமல், எங்களுக்கு ஜீவன் தந்த பசு மாடுகள், எருமைகள் உயிரிழந்து வருகின்றன.உணவு தேவை பூர்த்தி செய்யவில்லை எனில், இங்குள்ள பெரும்பாலான கால்நடைகள் தொடர்ந்து உயிரிழக்கும் அபாயம் உள்ளது. இதனை தடுக்க, அரசு மானிய விலையில் பசுந்தீவனம் வழங்க வேண்டும். இதற்கு மாவட்ட நிர்வாகம் போர் கால நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை