| ADDED : ஜன 10, 2024 11:52 PM
மேட்டுப்பாளையம் : காந்தவயல் மலைவாழ் கிராமத்தில், அரசு துணை சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என, மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சிறுமுகை பேரூராட்சியில், 18 வார்டுகள் உள்ளன. இதில் இரண்டாவது வார்டில், காந்தவயல், காந்தையூர், மொக்கை மேடு, உழியூர், ஆலூர் என ஐந்து மலைவாழ் கிராமங்கள் உள்ளன. இது அல்லாமல் விவசாய தோட்டங்களில், 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு அதிகளவில் மலைவாழ் மக்கள் வசிக்கின்றனர். இவர்கள் உடல் நலம் பாதித்தால், காந்தை ஆற்றைக் கடந்து, சிறுமுகைக்கு செல்ல வேண்டும்.இதுகுறித்து காந்தவயல் கிராம மக்கள் கூறியதாவது: இப்பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்கள் மற்றும் பொது மக்கள் விவசாய கூலி வேலைக்கு சென்று வருகின்றனர். இக்கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்கு, உடல் நலக்குறைபாடு ஏற்பட்டால்,சிறுமுகையில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். பஸ் வசதி இல்லாததால், இரண்டு கிலோ மீட்டர் நடந்து லிங்காபுரத்திற்கு செல்ல வேண்டும். அங்கு காத்திருந்து, பஸ்ஸில் சிறுமுகை செல்ல வேண்டும். சில நேரங்களில் உடல்நலம் பாதித்த வயதானவர்கள், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே இறந்து விடுகின்றனர்.அதனால் எங்கள் கிராமத்தில், அரசு துணை ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும். அல்லது வாரம் ஒரு முறை மருத்துவ குழு வந்து, இங்குள்ள மலைவாழ் மக்களுக்கு, மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மக்கள் கூறினர்.