ஊட்டி, குந்தாவில் உறைபனி நீடிப்பு; கருகி வரும் பசுந்தேயிலை செடிகள்
குன்னுார் : நீலகிரி மாவட்டத்தில் உறைபனியால், ஊட்டி, குந்தா பகுதிகளில் அதிகம் தேயிலை செடிகள் கருகி வருகின்றன.நீலகிரி மாவட்டத்தில், உறைபனியின் தாக்கம் கடந்த சில நாட்களாக நீடிக்கிறது. குறிப்பாக ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில், ஒரு டிகிரி செல்சியஸ் உறைபனி நிலவுகிறது. இந்த ஆண்டு தாமதமாக ஜன., பனியின் தாக்கம் துவங்கியதால் பல இடங்களிலும் புல்வெளிகள், தேயிலை செடிகள் கருகி வருகிறது. உபாசி வேளாண் ஆராய்ச்சி மைய ஆலோசனை அதிகாரி முருகேசன் கூறுகையில், ''தற்போது, ஊட்டி, குந்தா பகுதிகளில் உறைபனியால், எஸ்டேட் நிறுவனங்கள் மற்றும் சிறு, குறு தேயிலை விவசாயிகளின் தோட்டங்களில் பசுந்தேயிலை கருகி வருகிறது. அதே நேரத்தில், குன்னுார் மற்றும் கோத்தகிரி பகுதிகளில் உறைபனியின் தாக்கம் சற்று குறைவாக உள்ளதால் பெரிய பாதிப்பு இதுவரை ஏற்படவில்லை. ஓரிரு நாட்களில் தேயிலை பாதிப்பு முழு விபரம் தெரியவரும்,'' என்றார்.