| ADDED : நவ 28, 2025 04:37 AM
பாலக்காடு: அரிய வகை பறவையான 'செங்கழுத்து உள்ளான்' பாலக்காட்டில் முதல் முறையாக தென்பட்டுள்ளது. கேரள மாநிலம், பாலக்காடு மருதரோடு ஊராட்சிக்குட்பட்ட படலிக்காடு என்ற பகுதியில் உள்ள வயல் நிலத்தில் பறவை ஆய்வாளர் நோவல் குமார், இயற்கை வரலாற்று சங்க உறுப்பினர்களான ரவி காவுங்கல், விவேக் சுதாகரன் ஆகியோர் பறவை கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அங்கு 'செங்கழுத்து உள்ளான்' என்ற அரிய வகை பறவையை கண்டறிந்தனர். இது குறித்து அவர் கூறியதாவது: பறவைகள் பற்றிய அறிவியல் தரவுகளை சேகரிக்கும் 'இ--பேர்டு' அமைப்பின் அறிவிப்பின் படி, 'செங்கழுத்து உள்ளான்' பறவை பாலக்காடு மாவட்டத்தில் காணப்படும் 422வது பறவை இனமாகும். இந்த பறவை கடற்கரையிலிருந்து வெகு தொலைவில், உள்ள உள்நாட்டில் அரிதாகவே காணப்படுகின்றன. 2023ல் கோவை பகுதியிலும் இவை தென்பட்டுள்ளன. சிறப்பு வானிலை, மழை பொழிவு காரணமாக இப்பறவை இங்கு வந்துள்ளது. இந்தப் பறவை 6,000 கி.மீ., இடைவிடாமல் பறக்கும் திறன் கொண்டது. இவை தண்ணீரில் பல நாட்கள் ஓய்வெடுக்கும். தண்ணீரில் மேற்பரப்பில் உள்ள சிறிய மீன்களையும் நுண்ணுயிரிகளையும் உட்கொள்ளும். இவை வட அமெரிக்கா, ஆர்ட்டிக் பகுதியில் இனப்பெருக்கம் செய்கின்றன. குளிர்காலத்தில் வெப்பமண்டலப் பகுதிகளில் உள்ள பெருங்கடல்களில் வாழ்கின்றன. இந்தப் பயணத்தில்தான் கேரளக் கடற்கரையை அரிதாகவே அடைகிறது. இவை யூரேசியாவிலிருந்து பறந்து அரேபியா கடலுக்கு இடம்பெயர்கின்றன. சராசரி 18 செ.மீ., நீளம் கொண்ட இப்பறவைகளில் பெண் பறவைகள் மிகவும் அழகானவை என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு, கூறினர்.