| ADDED : ஜன 08, 2024 10:49 PM
கூடலுார்;கூடலுார் புதிய பஸ் ஸ்டாண்ட், தேசிய நெடுஞ்சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண, புதிய பஸ் ஸ்டாண்ட் பணியை விரைந்து முடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.கூடலுார் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் இட பற்றாக்குறைக்கு தீர்வு காணும் வகையில், புதிய பஸ் ஸ்டாண்ட் அமைக்க, 4.75 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, 2020 டிச., மாதம் பணிகள் துவங்கப்பட்டது.தற்போது பெரும்பாலான பணிகள் முடிந்துவிட்ட நிலையில், நிதி பற்றாக்குறை காரணமாக, பணிமனைக்கு சாலை அமைப்பது உள்ளிட்ட சில பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.இந்நிலையில் கடந்த அக்., மாதம் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டு, பணிமனைக்கு சாலை அமைக்கும் பணி துவங்கப்பட்டு நடந்து வருகிறது.பஸ் ஸ்டாண்ட் பணி முடியாத காரணத்தால், எதிரே உள்ள மைசூரு தேசிய நெடுஞ்சாலையை, அரசு பஸ்சை திருப்புவதற்கும், சாலையோரம் பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்கி செல்கின்றனர். இதனால், சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுகிறது. உள்ளூர் மட்டுமின்றி வெளிமாநில ஓட்டுனர்கள், பயணிகள், கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.ஓட்டுனர்கள் கூறுகையில், 'இப்பகுதி சாலையில் அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து நெரிசலால், வாகன விபத்துகள் ஏற்படுகின்றன. பஸ் ஸ்டாண்ட் பணிகளை முடித்தால் இப்பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும்,' என்றனர்.