உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / காய்கறி நோய்களை கட்டுப்படுத்த விதைநேர்த்தி...  அவசியம்!

காய்கறி நோய்களை கட்டுப்படுத்த விதைநேர்த்தி...  அவசியம்!

ஊட்டி: 'விதை நேர்த்தி செய்யும் முறையை விவசாயிகள் கடை பிடித்தால் நோய்களை கட்டுப்படுத்தி அதிக மகசூல் பெறலாம்,' என, வேளாண் துறை அறிவுறுத்தி உள்ளது. நீலகிரியில் தேயிலை விவசாயத்திற்கு அடுத்தபடியாக மலை காய்கறிகள் மற்றும் பூண்டு சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. 30 ஆயிரம் விவசாயிகள் வேளாண்பணியில் ஈடுபட்டுள்ளனர். 'இங்குள்ள ஊட்டி, எமரால்டு, அவலாஞ்சி உட்பட பலபகுதிகளில், பிரதானமாக பயிரிடப்படும் காய்கறி விதைகளை இயற்கை முறையில் விதை நேர்த்தி செய்வதன் வாயிலாக, நோய்களை கட்டுப்படுத்தி விதைகளின் தரத்தை உயர்த்தி நஞ்சில்லாமல் அதிக மகசூல் பெற முடியும். மேலும், விதை நேர்த்தி வாயிலாக தரமான விதைகள் கிடைப்பதால், விவசாய நிலத்தில் விதைக்கும் விதையின் அளவும் குறிப்பிடத்தக்க அளவு குறைக்கப்பட்டு இடுபொருள் செலவை வெகுவாக குறைக்க முடியும்,' என, வேளாண் துறை வலியுறுத்தி உள் ளது. நீர் திரவ விதை நேர்த்தி இம் முறையில், தண்ணீரை கொண்டு இரு முறைகளில் விதை நேர்த்தி செய்யலாம். முதலாவதாக, விதைகளை நீரில், 8 முதல் 12 மணி நேரம் ஊரவைப்பதன் மூலம் விதையின் உடலியல் காரணிகள் துாண்டப்பட்டு முளைப்பு திறன் வேகம் எடுத்து, அனைத்து விதைகளும் சீராக முளைப்பது உறுதி செய்யப்படுகிறது. இரண்டாவதாக, 55 டிகிரி செல்சியஸ் வெப்பம் உள்ள நீரில், 20 முதல் 30 நிமிடம் விதைகளை ஊரவைப்பதால், விதைகளின் மேல் பரப்பிலும் விதை தொல்லியின் அடியிலும் இருக்கும் நோய் ஏற்படுத்தும் நுண்ணுயிரிகள் அழிக்கப்பட்டு விதைமூலம் பரவக்கூடிய நோய்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன. இம்முறையில் விதை நேர்த்தி செய்யும்போது நீரின் வெப்பம், 55 டிகிரி செல்சியஸ் தாண்டக்கூடாது. தாண்டினால் விதை வெகுவாக பாதிக்கப்படும். மேலும், மூன்று நாட்கள் நன்கு புளித்த மோரில் விதைகளை நன்றாக கலந்து, 30 நிமிடம் ஊரவைத்து பின் நிழலில் உலர்த்தி விதைப்பதால் விதைகள் சீராகவும் வீரியமாகவும் முளைப்பதை காண முடியும். மேலும், 2 சதவீதம் ஜீவாமிர்தம் அல்லது பஞ்ச காவியாவுடன், 6 மணி நேரம் ஊரவைத்து விதைப்பதால் பயிர்களின் நோய் எதிர்ப்பு திறன் துாண்டப்பட்டு சீராக முளைப்பது கண்டறியப்பட்டுள்ளது. வேளாண் அலுவலர் நவீன் கூறுகையில்,'' உயிரியல் சார்ந்த விதை நேர்த்தி உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகலான, 'டிரைக்கோடெர்மா மற்றும் சூடோமோனாஸ் பிலோரசன்ஸ் அல்லது பேசிலஸ் சப்டிலீஸ்' ஆகியவற்றை, 1 கிலோ விதைக்கு தலா, 4 கிராம் வீதம் நன்றாக கலந்து விதைப்பதால் பயிர்களை தாக்க கூடிய நோய்களை நீண்டகாலம் கட்டுப்படுத்தலாம். மேலும், உயிர் உரமான, 'அசோஸ்பைரில்லம் ஒரு ஹெக்டர் விதைக்கு, 600 கிராம் என்ற வீதம் வடிகட்டி ஆர வைத்த கஞ்சியுடன் கலந்து, 30 நிமிடம் ஊரவைத்து நிழலில் உலர்த்தி விதைப்பதன் மூலம் யூரியா இடுவதை குறைத்து மகசூலை பெருக்கலாம். உயிரியல் விதை நேர்த்தி செய்த விதைகளுக்கு ரசாயன விதை நேர்த்தி செய்யக்கூடாது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை