| ADDED : பிப் 01, 2024 10:54 PM
மஞ்சூர்:மஞ்சூர் அருகே கொட்டரக்கண்டி பகுதியில் கழிவுநீர் பிரச்னைக்கு விமோசனம் கிடைத்ததால் மக்கள் நிம்மதி அடைந்தனர். கீழ்குந்தா பேரூராட்சிக்கு உட்பட்ட கொட்டரக்கண்டி பகுதியில் நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு, 'கழிவுநீர், நடைபாதை மற்றும் கொட்டரக்கண்டி முதல் மட்டக்கண்டி வரை சாலை சீரமைப்பு உள்ளிட்ட அடிப்படை தேவைகளை நிறைவேற்ற வேண்டும்,' என, அப்பகுதி மக்கள் வார்டு கவுன்சிலரிடம் கோரிக்கை மனு அளித்தனர். மன்ற கூட்டத்தில் நிதி ஒதுக்க கோரி கவுன்சிலர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். அதன்படி, 18 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. முதற்கட்டமாக கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது. நிதிநிலையை கருத்தில் கொண்டு பிற பணிகள் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர். கிராம மக்கள் கூறுகையில்,'வார்டு பகுதியில் கடந்த பல ஆண்டுகளாக அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்படாமல் இருந்ததால் மக்கள் அவதியடைந்தனர். தற்போது, கழிவுநீர் உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் நடந்து வருகிறது,' என்றனர்.