| ADDED : ஜன 11, 2024 10:40 PM
மேட்டுப்பாளையம்;மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் ஓடந்துறை ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஏராளமான வணிக வளாகங்கள், ஹோட்டல்கள், தங்கும் விடுதிகள், கடைகள் உள்ளன. இவற்றின் கழிவு நீர் மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்குட்பட்ட அடர்ந்த வனப்பகுதிக்குள் விடப்படுகின்றன.இது தொடர்பாக வனத்துறை சார்பில் ஓடந்துறை காப்புகாடு பகுதிகள், ஊட்டி சாலை என பல்வேறு இடங்களில் அண்மையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு உறுதி செய்யப்பட்டது.கழிவு நீரின் மாதிரிகள் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளால் எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. இது குறித்து மேட்டுப்பாளையம் வனச்சரகர் ஜோசப் ஸ்டாலின் கூறுகையில், கோவை வடக்கு மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்களால், கழிவு நீர் மாதிரி சேகரிக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இதன் முடிவுகள் விரைவில் வெளியாகும். அதில் கலந்துள்ள கெமிக்கல்கள், அதன் அளவுகள் குறித்து ஆய்வின் முடிவில் தெரியவரும். முடிவை பொறுத்து அதற்கு காரணமானவர்கள் மீது வனத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.