| ADDED : பிப் 17, 2024 12:23 AM
கூடலுார்:கூடலுார் அருகே, இருசக்கர வாகனத்தில் சென்றபோது, சாலையில் யானையை பார்த்து, தவறி விழுந்து காயமடைந்த பெண்ணுக்கு, சிகிச்சை அளிக்க தாமதம் செய்ததாக கூறி, அரசு மருத்துவமனை ஊழியர்களிடம், உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.கூடலுார் கோழிப்பாலம் பகுதியை சேர்ந்தவர் மதுமித்ரா, 21. இவர், பால்மேட்டில் உள்ள உறவினர் வீட்டில் நடந்த விழாவுக்கு சென்று விட்டு இரவு, 10:00 மணிக்கு, இருசக்கர வாகனத்தில், உறவினருடன் கோழிப்பாலம் நோக்கி வந்தார். அப்போது காட்டு யானை சாலையின் குறுக்கே வந்ததை பார்த்து, அதிர்ச்சி அடைந்து, நிலை தடுமாறி விழுந்ததில் காயமடைந்தார். சம்பவம் குறித்து அறிந்த அப்பகுதியினர், அவரை மீட்டு சிகிச்சைக்காக, கூடலுார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவருக்கு சிகிச்சை அளிக்க தாமதம் செய்வதாக கூறி, உறவினர்கள் மருத்துவமனை ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீசார், அவர்களை சமாதானப்படுத்தினர். தொடர்ந்து, மேல்சிகிச்சைக்காக அவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது.