| ADDED : ஜன 20, 2024 10:08 PM
கூடலுார்:கூடலுாரின் பூர்வகுடிகளான பழங்குடியினர் பாரம்பரியமாக பயன்படுத்தி வரும் காதோலை அணிவதில் இளைய தலைமுறையினர் இடையே ஆர்வம் குறைந்து வருகிறது.நீலகிரி மாவட்டம், கூடலுார் பகுதியில் பூர்வகுடிகளான பணியர், குறும்பர், காட்டுநாயக்கர் இன பழங்குடி மக்கள் வனம் சார்ந்த குக்கிராமங்களில் வசித்து வருகின்றனர். நாகரிக மாற்றத்தால், இன்றைய இளைய தலைமுறையினர் இடையே பாரம்பரியமான, உடைகள் காதணிகள் அணிவதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.இதனால், இவர்கள் பயன்படுத்தி வந்த பாரம்பரியமான பல பொருட்கள் அழிந்து வரும் சூழல் ஏற்பட்டுள்ளது. மறைந்து வரும் காதோலை கம்மல்
இப்பகுதியில் இயற்கையாக கிடைக்கும் 'தாளஞ்செடி' இலைகளை பறித்து அதனை பதப்படுத்தி, வட்ட வடிவிலான காதோலையை உருவாக்குகின்றனர். அதன் வெளிப்பகுதியில் கருகமணி பதித்த கம்மலை பெண்கள் பாரம்பரியமாக பயன்படுத்தி வருகின்றனர். இதன் அளவு காதுகளின் துளைக்கு ஏற்பமாறுபடும்.ஆனால், இன்றைய இளைய தலைமுறை பழங்குடி பெண்கள் கால மாற்றத்தின் காரணமாக, 'காதோலை'கள் அணிவதை அவர்கள் விரும்புவதில்லை. தற்காலத்துக்கு ஏற்ப உடை மற்றும் காதணிகளை அணிய துவங்கி உள்ளனர். இதனால், பாரம்பரியமான காதோலைகளை முதியவர்கள் மட்டும் அணிந்து வருகின்றனர். இவர்களின் காலத்துக்கு பின், பாரம்பரியமான காதோலை என்பது, காட்சி பொருளாக மட்டுமே பார்க்கும் சூழல் உள்ளது.பழங்குடியின பெண்கள் கூறுகையில்,'இன்றைய கால மாற்றத்தால், எங்கள் சமூகத்தை சேர்ந்த பெண்கள் காதோலை அணிவதை விரும்புவதில்லை. எங்கள் காலத்துக்கு பின் பாரம்பரியமான காதோலை பயன்பாடும் அழிந்து விடும் என்பது வருத்தமாக உள்ளது,' என்றனர்.