உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மனிதர்களை தாக்கும் சிறுத்தையை பிடிக்க வலியுறுத்தல் சாலை மறியலால் பரபரப்பு!உள்ளூர் கடைகள் அடைப்பு; வாகனங்கள் இயங்கவில்லை

மனிதர்களை தாக்கும் சிறுத்தையை பிடிக்க வலியுறுத்தல் சாலை மறியலால் பரபரப்பு!உள்ளூர் கடைகள் அடைப்பு; வாகனங்கள் இயங்கவில்லை

பந்தலுார்;பந்தலுார் அருகே மனிதர்களை தாக்கி வரும் சிறுத்தையை பிடிக்க வலியுறுத்தி, கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.பந்தலுார் அருகே ஏலமன்னா, பெருங்கரை, படைச்சேரி, கொளப்பள்ளி சுற்று வட்டார பகுதிகளில், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக சிறுத்தை ஒன்று வளர்ப்பு கால்நடைகளை தொடர்ச்சியாக வேட்டையாடி வந்தது.கடந்த மாதம், 22ம் தேதி ஏலமன்னா பகுதியை சேர்ந்த சரிதா, பெருங்கரையை சேர்ந்த துர்கா மற்றும் வள்ளியம்மாள் ஆகியோர் சிறுத்தையால் தாக்கப்பட்டனர்.அதில், பலத்த காயம் அடைந்த பழங்குடியின பெண் சரிதா,26, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 70-க்கும் மேற்பட்ட வனக்குழுவினர், 20 இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி, 5 இடங்களில் கூண்டுகள் வைத்து, அதில் ஆடுகளை கட்டி சிறுத்தையை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.அதே சிறுத்தை பொதுமக்கள் மற்றும் வனத்துறையினர் கண்களில் தென்பட்டதுடன், கண்காணிப்பு கேமராவிலும் பதிவாகி உள்ளது. ஆனால், இதுவரை கூண்டுக்குள் சிக்கவில்லை.

குழந்தையை தாக்க முயற்சி

இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை கொளப்பள்ளி அருகே சேவியர் மட்டம் என்ற இடத்தில், வீட்டிற்கு வெளியே இருந்த வசந்தகுமார் என்பவரின், 4- வயது குழந்தையை, சிறுத்தை தாக்க முயன்றது. குழந்தையின் தாயார் அருகே இருந்ததால் குழந்தையை காப்பாற்றியதுடன், அருகில் இருந்தவர்கள் சப்தம் எழுப்பி சிறுத்தையை விரட்டினர்.தொடர்ந்து, சிறுத்தையை பிடிக்க வலியுறுத்தி, நேற்று காலை, 9:00 மணிக்கு, கொளப்பள்ளி பஜாரில், பொதுமக்கள், அனைத்து அரசியல் கட்சியினர், வியாபாரிகள், ஓட்டுனர்கள் இணைந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.கடைகள் அடைக்கப்பட்டதுடன், டாக்சி ஜீப், ஆட்டோ போன்ற வாகனங்களும் இயக்கப்படவில்லை. தொழிலாளர்களும் வேலைக்கு செல்லாமல் போராட்டத்தில் பங்கேற்றனர்.

மயக்க ஊசி செலுத்த உத்தரவு

கூடலுார் ஆர்.டி.ஓ., முகமது குதுரதுல்லா, வன அலுவலர் கொம்மு ஓம்காரம்,டி.எஸ்.பி.க்கள் செந்தில்குமார் மற்றும் செல்வராஜ், தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி, உள்ளிட்டோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். 'சிறுத்தை பிடிப்பதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம்,' என, பொதுமக்கள் தெரிவித்தனர்.அதனை தொடர்ந்து, வனத்துறை முதன்மை தலைமை வன பாதுகாவலர், சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க உத்தரவிட்டார். அதனை ஏற்று கொண்ட பொதுமக்கள் பிற்பகல், 2:00 மணிக்கு போராட்டத்தை கைவிட்டனர். மீண்டும் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட முற்பட்ட போது, போலீசார் அவர்களை சமாதானப்படுத்தினர்.போராட்டத்தில், எம்.எல்.ஏ., ஜெயசீலன், சேரங்கோடு ஊராட்சி மன்ற தலைவர் லில்லி, துணை தலைவர் சந்திரபோஸ் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.நேற்று மாலை, வனச்சரகர்கள் ரவி, அய்யனார், கால்நடை டாக்டர் ராஜேஷ்குமார் தலைமையிலான வனக்குழுவினர் 'ட்ரோன் கேமரா' மூலம், சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ