| ADDED : பிப் 23, 2024 10:48 PM
அன்னுார்:அத்திக்கடவு திட்டத்தை உடனே பயன்பாட்டுக்கு கொண்டு வரக் கோரி, மார்ச் 1ம் தேதி நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் அதிக அளவில் பங்கேற்க முடிவு செய்யப்பட்டது.கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மூன்று மாவட்டங்களில், 1,045 குளம், குட்டைகளுக்கு நீர் நிரப்பும், 1,942 கோடி ரூபாயிலான அத்திக்கடவு அவிநாசி திட்ட பணிகள் முடிவடைந்து ஓராண்டாகி விட்டது. எனினும் முழுமையாக பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை.உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டு வரக் கோரியும், இத்திட்டத்தில் விடுபட்ட, 1,400 குளம் குட்டைகளுக்கான இரண்டாம் திட்டப் பணிகளை உடனடியாக துவக்க வலியுறுத்தியும், மார்ச் 1ம் தேதி திருப்பூர் மாவட்டம், அவிநாசி, புதிய பஸ் நிலையம் முன், ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அத்திக்கடவு - அவிநாசி திட்ட போராட்டக் குழு அறிவித்துள்ளது.அன்னூர் வட்டார அத்திக்கடவு திட்ட ஆர்வலர்கள் கூறுகையில், 'இந்த ஆர்ப்பாட்டத்தில் அன்னூர் வட்டாரத்திலிருந்து அதிக அளவில் பங்கேற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்த துண்டு பிரசுரங்கள், பொதுமக்களிடம் விநியோகித்து வருகிறோம். அரசு விரைவில் இத்திட்டத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என, வலியுறுத்தி நடக்கும் இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிக அளவில் பங்கேற்க விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளோம்' என்றனர்.