| ADDED : ஜூலை 02, 2024 05:22 AM
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்துார் அருகே மேலக்கன்னிசேரி பகுதியில் உள்ள சிறுமணியேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் பாண்டித்துரை, 62. இவரது விதவை மகளுக்கு, மாத பென்ஷன் பெற விண்ணப்பித்திருந்தார். இதுகுறித்து நல்லுார் குரூப் வி.ஏ.ஓ., பூமிசந்திரனிடம் கேட்டார். அதற்கு பூமிசந்திரன், 6,000 ரூபாய் லஞ்சம் கேட்டார். அவ்வளவு பணம் கொடுக்க முடியாது என மறுத்த பாண்டித்துரை, ராமநாதபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். டி.எஸ்.பி., ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார், மத்திய அரசின் புதிய சட்டமான, பாரதிய நியாய சன்ஹிதாவின், 173வது பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.ரசாயனம் தடவிய பணத்தை பாண்டித்துரையிடம் கொடுத்து, முதுகுளத்துார் வி.ஏ.ஓ., அலுவலகத்தில் பூமிசந்திரனிடம் கொடுக்க வைத்தனர். மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், பூமிசந்திரனை கையும் களவுமாக கைது செய்தனர்.டி.எஸ்.பி., ராமச்சந்திரன் கூறியதாவது: மத்திய அரசின் புதிய சட்டமான, பாரதிய நியாய சன்ஹிதாவின் 173வது பிரிவின் கீழ் லஞ்சம் கொடுப்பதும் குற்றம்; வாங்குவதும் குற்றம். இதில், கொடுப்பவர் விருப்பப்பட்டு கொடுத்தால் தவறாகும். அவர் லஞ்சம் கொடுக்க விருப்பம் இல்லாமல் தான் புகார் தெரிவித்துள்ளார்.இதன் காரணமாக லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., கைது செய்யப்பட்டுள்ளார். மத்திய அரசின் புதிய சட்டத்தில், தமிழகத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.