| ADDED : ஜூன் 17, 2024 12:18 AM
பரமக்குடி : -பரமக்குடி நகர் அருகேயுள்ள ஊராட்சி பகுதிகளில் நீர் நிலைகள் குப்பையால் நிரப்பப்பட்டுள்ளன. அவற்றை அகற்ற வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர். பரமக்குடி பகுதிக்கு உட்பட்ட பல்வேறு ஊராட்சிகளில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற போதிய நிதி ஆதாரம் இன்றி சிரமப்படுகின்றனர். இச்சூழலில் பரமக்குடி நகர் அருகில் மற்றும் வளர்ந்து வரும் கிராமப் பகுதிகளில் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் பெருகியுள்ளன. இப்பகுதிகளில் தினமும் பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் மற்றும் குப்பை ரோட்டோரங்கள், வயல்வெளிகள், மற்றும் கால்வாய், கண்மாய், ஊருணி ஆகிய நீர் நிலைகளில் கொட்டப்பட்கிறது.இவை சாதாரணமாக ஒவ்வொரு நீர் நிலைகளின் கரைகளிலும் கொட்டப்படும் சூழலில், நாளடைவில் நீர்வழிப் போக்குகளில் அடைப்பு ஏற்படும் அளவிற்கு குவிக்கின்றன. இது குறித்து ஊராட்சி தலைவர்கள் மற்றும் செயலாளர்கள் தெரிவிக்கும்போது, போதுமான அடிப்படை வசதிகளை நிறைவேற்ற நிதி ஆதாரம் போதிய அளவில் கிடையாது.மேலும் குப்பை அள்ள ஆட்கள் நியமிக்கும் பட்சம் அவர்களுக்கான சம்பளம் மற்றும் குப்பை அள்ளுவதற்கான வாகனங்கள் என தேவை உள்ளது. எனவே தூய்மை இந்தியா திட்டத்தை முழுமைப்படுத்த நிதி ஆதாரங்களை மேம்படுத்த, ஊராட்சிகளுக்கு நிதி ஒதுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.