உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / காற்றோடு போனதா அறிவிப்பு *குதிரை மொழியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் *அமைச்சர் தொகுதியில் அவர் உறுதியளிப்பு என்னாச்சு 

காற்றோடு போனதா அறிவிப்பு *குதிரை மொழியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் *அமைச்சர் தொகுதியில் அவர் உறுதியளிப்பு என்னாச்சு 

ராமநாதபுரம்: -ராமநாதபுரம் மாவட்டம் குதிரைமொழியில் கடல் நீரை கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் குறித்த அமைச்சரின் அறிவிப்பு காற்றோடு போனதா. இத்திட்டத்தை செயல்படுத்துவது எப்போது என்ற கேள்வி எழுந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் வறட்சி மிகுந்த மாவட்டம். இன்றும் குடிநீருக்காக தள்ளுவண்டிகளுடன் பெண்கள் பல கி.மீ.,அலைவது தொடர்கிறது. மாவட்டத்தில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் 4 நகராட்சிகள், 7 பேரூராட்சிகள், 11 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 429 கிராம மக்கள் பயன் பெறுகின்றனர். இதில் போதுமான குடிநீர் கிடைக்காததால் இரண்டாவது கட்டமாக கூடுதல் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்திற்கான பணிகள் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தினரால் 2 நகராட்சிகள், 5 பேரூராட்சிகள், 11 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 2306 ஊரக குடியிருப்புகள் பயன் பெறும் வகையில் ரூ.2819.78 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடக்கிறது. இருந்தும் குடிநீர் தட்டுப்பாடு நீங்குவதாக தெரியவில்லை. காவிரி ஆற்றையும், வைகை ஆற்றையும் நம்பியே இங்குள்ள கூட்டுக் குடிநீர் திட்டங்கள் உள்ளன. கடேலோரப்பகுதி மக்கள் பயன் பெறும் வகையில் 1999 ல் தி.மு.க., ஆட்சியில் ரூ.39.5 கோடியில் நரிப்பையூரில் கடல் நீரை நன்னீராக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது.தனியார் நிறுவனத்தினர் இதனை பராமரித்தனர். இதன் மூலம் கடலாடி, முதுகுளத்துார், கமுதி தாலுகாக்களில் உள்ள 290 கிராமங்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. *முடக்கம்: இத்திட்டத்தில் முறையான பராமரிப்பு இல்லாமல் கடல் நீரை நன்னீராக்கும் திட்டம் 2006 முதல் முடக்கப்பட்டது. இதனால் நரிப்பையூர் குடிநீர் பிளான்டில் இருந்த இயந்திரங்கள் அனைத்தும் துருப்பிடித்து பழைய இரும்புக்கு கூட விற்க முடியாத நிலையில் இத்திட்டம் முற்றிலும் முடங்கியது. இன்றும் நரிப்பையூர் கூட்டுக்குடிநீர் திட்ட இயந்திரங்கள் காட்சிப் பொருளாகவுள்ளன. *குதிரை மொழி திட்டம்: அடுத்து ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க., அரசு அருகில் குதிரை மொழி என்ற இடத்தில் கடல் நீரை நன்னீராக்கும் திட்டம் ரூ.1000 கோடியில் செயல்படுத்தப்படும் என அறிவித்தனர். இத்திட்டத்திற்கு நிதியுதவி கிடைக்காமல் உலக வங்கி, ஜப்பான் போன்ற நாடுகளின் நிதி நிறுவனங்களில் தமிழக அரசு கடன் கேட்டது.இந்நிலையில் நிதி ஒதுக்கீடு செய்யப்படாததால் குதிரை மொழி திட்டம் கிடப்பில் போடப்பட்டது. மீண்டும் இத்திட்டத்தை ஆய்வு செய்த அரசு ரூ.1350 கோடியில் திட்டம் நிறைவேற்றப்படும் என அறிவித்தது. இதுவும் அறிவிப்போடு நின்று போனது. *காற்றோடு போன அமைச்சர் அறிவிப்பு: இதன் பின் மீண்டும் தி.மு.க., ஆட்சிக்கு வந்த நிலையில் தொகுதி அமைச்சரான ராஜகண்ணப்பன் குதிரை மொழி கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் ரூ.2000 கோடியிலும், நரிப்பையூரில் ரூ.120 கோடியிலும் மீண்டும் செயல்படுத்தப்படும் என அறிவித்தார். இந்த அறிவிப்பும் காற்றோடு போனது. கடல் நீரை நன்னீராக்கும் திட்டம் தொடர்ந்து கிடப்பில் போடப்பட்டுள்ளது. தமிழக அரசு ராமநாதபுரம் மாவட்ட மக்களின் தாகம் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 290 கிராம மக்களின் வாழ்வாதாரமாக உள்ள கடல் நீரை நன்னீராக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். ----


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை