| ADDED : ஜூலை 09, 2024 04:45 AM
திருவாடானை: திருவாடானை ஊராட்சி ஒன்றிய ஓட்டுச் சாவடிகளில் அடிப்படை வசதிகள் மேற்கொண்ட செலவினங்களுக்கான தொகை வழங்கப்படாததால் ஊராட்சி நிர்வாகங்கள் தவிக்கின்றன.லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு ஏப்.19ல் நடந்தது. இதில், ஓட்டுச் சாவடிகளாக அரசுப் பள்ளிகள், நிதியுதவி பெறும் பள்ளிகள் பயன்படுத்தப்பட்டன. ஓட்டுச் சாவடிகளில் வாக்காளர்கள் வசதிக்காக உரிய ஏற்பாடுகள் செய்ய மாநில தேர்தல் ஆணையம் அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கும் அறிவுறுத்தியது. மாவட்ட தேர்தல் அலுவலர்கள் அந்தந்த பகுதியில் உள்ள ஒன்றிய நிர்வாகங்கள், ஊராட்சி பகுதியில் இதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளவும், ஊராட்சி பொது நிதியில் இதை ஈடு செய்து கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது. ஊராட்சி தலைவர்கள் கூறுகையில், ஊராட்சி பகுதிகளில் உள்ள ஓட்டுச் சாவடிகளில் ஷாமியானா பந்தல் அமைத்தல், உதவி மையம் அமைத்தல், குடிநீர், கழிப்பிடம், மின் இணைப்புகள், விளக்குகள் உள்ளிட்ட குறைந்த பட்ச வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. தேர்தல் ஓட்டுப் பதிவு, ஓட்டு எண்ணிக்கை அனைத்தும் முடிந்து, மத்தியில் புதிய ஆட்சி அமைந்தும் விட்டது. ஆனால் ஊராட்சி அமைப்புகளுக்கு தேர்தல் பணிக்கு செலவிட்ட தொகை விடுவிக்கப்படாமல் உள்ளது என்றனர்.