உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பள்ளிகளில் சத்துணவு காலியிடங்கள் பணிச்சுமையால் ஊழியர்கள் அவதி

பள்ளிகளில் சத்துணவு காலியிடங்கள் பணிச்சுமையால் ஊழியர்கள் அவதி

திருவாடானை : திருவாடானை ஊராட்சி ஒன்றியத்தில் 26 பள்ளிகளில் சத்துணவு அமைப்பாளர், சமையலர், உதவியாளர்கள் இல்லாததால் கூடுதல் பணிச் சுமையால் பணியாளர்கள் தவிக்கின்றனர்.வறுமையில் வாடும் கிராம ஏழை மாணவர்களின் நிலையை கருத்தில் கொண்டு சத்துணவு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் அரசுப்பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்று முதல் 10 ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சத்துணவு வழங்கபடுகிறது. ஒரு பள்ளியில் சத்துணவு அமைப்பாளர், சமையலர், உதவியாளர் என மூன்று பேர் பணிபுரிய வேண்டும். திருவாடானை யூனியனில் மொத்தமுள்ள 393 சத்துணவு பணியாளர்களில் 169 பணியிடங்கள் காலியாக உள்ளது. இதில் அரசூர், அல்லிக்கோட்டை, அழகமடை, ஆதியூர் (மேற்கு), அரசத்துார், கருமொழி, கிடங்கூர், கீழக்கோட்டை, கோவனி, சம்பாநெட்டி, சித்தாமங்கலம், சின்னத்தொண்டி, செங்காலன்வயல், திருவடிமதியூர், நீர்க்குன்றம், புதுவயல், புல்லுார், பெருமானேந்தல், ஊரணிக்கோட்டை, கட்டியனேந்தல், கடம்பூர், சமத்துவபுரம், எட்டுகுடி, தொண்டி, பதனக்குடி, பாசிபட்டினம் ஆகிய பள்ளிகளில் சத்துணவு அமைப்பாளர், சமையலர், உதவியாளர் என மூன்று பணியாளர்களும் இல்லை. இதனால் ஒவ்வொரு பணியாளரும் நான்கு முதல் ஏழு பள்ளிகள் வரை கூடுதல் பொறுப்பேற்று பணியாற்ற வேண்டிய நிலை உள்ளது. சமூக நலத்துறை கட்டுபாட்டில் இத்திட்டம் இருந்த போதும் ஊழியர்கள் நியமனம், இடமாற்றம், கண்காணிப்பு, நிதி ஒதுக்கீடு போன்றவற்றை ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளே செய்கின்றனர்.இது தவிர பள்ளி தலைமை ஆசிரியர்கள் மேற்பார்வையிடுதல், புகார் அனுப்புதல் போன்றவற்றை மேற்கொள்கின்றனர். பெரும்பாலும் சத்துணவு துறையில் பெண் ஊழியர்களே அதிகமாக உள்ளதால் கூடுதல் பணிச்சுமையால் சிரமம் அடைந்துள்ளனர். எனவே காலியிடங்களை உடனே நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சத்துணவு ஊழியர்கள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி