| ADDED : ஆக 19, 2024 12:43 AM
ராமநாதபுரம் : ராமநாதபுரம் இன்பன்ட் ஜீசஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்த மாவட்ட அளவிலான யோகாசன போட்டிகளை துவக்கி வைத்து சந்தீஷ் எஸ்.பி., மாணவர்களுக்கு மன அழுத்தத்திற்கு சரியான மருந்து யோகாசனம் என அறிவுரை வழங்கினார்.ராமநாதபுரம் இன்பன்ட் ஜீசஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட அளவிலான யோகசன போட்டிகள் துவக்க விழா நடந்தது. மாவட்ட விளையாட்டு அலுவலர் தினேஷ்குமார் தலைமை வகித்தார். துணைத்தலைவர் நம்பூதியான் முன்னிலை வகித்தார். ராமநாதபுரம் மாவட்ட யோகசன விளையாட்டு சங்க செயலாளர் ஸ்ரீதரன் வரவேற்றார்.யோகாசன போட்டிகளை துவக்கி வைத்து சந்தீஷ் எஸ்.பி., பேசியதாவது: யோகா கலை இந்திய நாட்டின் பாரம்பரியம் மிக்கது. இதை இந்தியர்களாகிய நாம் மறந்து விட்டோம். பிரதமர் மோடி யோகாசனத்தின் முக்கியத்துவம் அறிந்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். எனது தந்தை 40 வயதில் யோகாசனம் செய்ய ஆரம்பித்தார். 22 ஆண்டுகளாக தொடர்ந்து செய்து வருகிறார்.நான் சிறு குழந்தையாக இருந்த போது எனது தந்தையுடன் யோகாசனம் செய்யக் கற்றுக்கொண்டேன். தினமும் சூரிய நமஸ்காரம் செய்து விடுவேன். நான் ஐ.பி.எஸ்., தேர்வுக்கு தயாராகிக்கொண்டிருந்த போது கடுமயைான மன அழுத்தம் ஏற்பட்டது. அதிலிருந்து விடுபட யோகாசனம் உதவியது.இன்று வரை யோகாசனத்தை தொடர்ந்து வருகிறேன். யோகாசனத்தை குழந்தைகள் தங்கள் பெற்றோருக்கு அறிமுகம் செய்ய வேண்டும். அவர்களை சூரிய நமஸ்காரம் செய்ய பழக்க வேண்டும். யேகாசனம் செய்தால் என்றும் இளமையாக உணரலாம். இதனை தொடர்ந்து மாணவர்கள் பின்பற்ற வேண்டும் என்றார். பள்ளி தாளாளர் ஜான், முதல்வர் தாமஸ், யோகாசன விளையாட்டு சங்க மாவட்டத்தலைவர் லேனா செந்தில்குமார் பேசினர். யோகாசன சங்க பொறுப்பாளர் மாரிமுத்து நன்றி கூறினார். மாவட்ட அளவிலான யோகாசன போட்டியில் 25 பள்ளிகளைச் சேர்ந்த 350 மாணவர்கள் பங்கேற்றனர். இதில் வெற்றி பெற்றவர்கள் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்பார்கள். தேசிய அளவிலான போட்டிக்கான தேர்வு போட்டிகள் சென்னையில் ஆக.24, 25ல் நடக்கிறது.