| ADDED : நவ 22, 2025 12:29 AM
திருப்புத்துார்: திருப்புத்துார் ஒன்றியம் கீரணிப்பட்டியில் பாண்டிய மன்னன் கோச்சடையமாறனின் கி.பி.,9ம் நுாற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது. கீரணிப்பட்டி கண்மாய் மடைக்கான நீர்மட்டக் கல் அருகே கல்வெட்டுக்கள் இருப்பதாக கிராமத்தினர் அழகப்பா அரசு கலைக்கல்லுாரி வரலாற்றுத்துறை இணைப்பேராசிரியர் வேலாயுதராஜா, புதுக்கோட்டை தொல்லியல் கழகத் தலைவர் கரு.ராஜேந்திரனுக்கு தெரிவித்தனர். அவர்கள் அப்பகுதியில் களஆய்வு செய்தனர். அங்கிருந்த பலகைக்கல்லின் இருபுறமும் இருந்த கல்வெட்டை படியெடுத்து படித்ததில் கிடைத்த தகவல்கள்: கோச்சடையமாறனின் 10வது ஆட்சியாண்டில் பொறிக்கப்பட்டது என்பதும், இக்கல்வெட்டில் பின் பகுதியில் நின்ற நிலையில் ஒரு குதிரையின் உருவமும் செதுக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. மேலும், சூரலுார் கூற்றத்து சூலுார்பேட்டையில் இருந்து வாழும் ஆருவாரிக்கு கோச்சடையமாறரின் ஆட்சிக்காலத்தில் கீரனூரில் பாவண்ஏரி பகுதியில் அரை மாச்செய் நிலம் ஊரார் தானம் கொடுத்த செய்தியைத் தெரிவிக்கிறது. இதை மாற்றுபவர் இவ்வூரை அழித்த பாவம் கொள்வான் என்ற செய்தியையும் கூறுகிறது. பண்டைய கீரனுாரே தற்போதைய கீரணிப்பட்டியாக மருவியுள்ளதாகக் கருதலாம். முதலாம் வரகுண பாண்டியனுக்குப் பின்னர் அவனது புதல்வனாகிய சீமாறன் சீவல்லபன் ஆட்சிக்கு வந்தார். சீமாறன் சீவல்லபனுக்குச் சடையன் மாறன் என்ற பெயரும் உண்டு. இவரது வரலாற்றைச் சின்னமனுார்ச் செப்பேடுகளும், தளவாய்புரச் செப்பேடுகளும், சித்தன்னவாசல் கல்வெட்டு மற்றும் சில கல்வெட்டுகளும் கூறுகின்றன. இவருக்கு முந்தைய ஆட்சியாளராகிய மாறன் சடையனின் வட்டெழுத்துக் கல்வெட்டு கீரணிப்பட்டிக்கு அருகில் உள்ள திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.