ஸ்ரீவில்லிபுத்துார்: ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக அ.தி.மு.க., பிரமுகர் சிகாமணி உட்பட ஐவர் மீது தொடரப்பட்ட போக்சோ வழக்கிலிருந்து, அவர்களை விடுதலை செய்து ஸ்ரீவில்லிபுத்துார் போக்சோ நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. ஒன்பதாம் வகுப்பு மாணவி ஒருவருக்கு, 2022 -- 23ல் பாலியல் தொல்லை கொடுத்ததாக, பரமக்குடி அ.தி.மு.க., முன்னாள் கவுன்சிலர் சிகாமணி, 44, அவரது நிறுவன ஊழியர்கள் அன்னலட்சுமி, 34, கயல்விழி, 45, புது மலர் பிரபாகரன், 32, ஜவுளிக்கடை உரிமையாளர் ராஜா முஹமது, 36, ஆகியோரை பரமக்குடி மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். பின், இந்த வழக்கு ராமநாதபுரம் மாவட்ட சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றப்பட்டது. ராமநாதபுரம் போக்சோ நீதிமன்றத்தில் சிகாமணி ஜாமின் பெற்றார். அதை எதிர்த்து சி.பி.சி.ஐ.டி., போலீசார் மதுரை உயர் நீதிமன்றத்தில் மனு செய்த நிலையில், அவரது ஜாமின் ரத்து செய்யப்பட்டது. இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் சிகாமணி மேல்முறையீடு செய்தார். அதில், மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவு சரிதான் என்று கூறி, வழக்கை ஸ்ரீவில்லிபுத்துார் போக்சோ நீதிமன்றத்திற்கு மாற்றி, ஐந்து மாதத்தில் முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஸ்ரீவில்லிபுத்துார் போக்சோ நீதிமன்றத்திற்கு வழக்கு மாற்றம் செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது. இதில் ஆக., 17ல் தீர்ப்பு என அறிவிக்கப்பட்ட நிலையில், வழக்கு ஆவணங்கள் சரிபார்த்தல், குறியிடுதல் போன்ற காரணங்களுக்காக, தீர்ப்பு நேற்று வழங்குவதாகக் கூறி ஒத்திவைக்கப்பட்டது. நேற்று காலை நீதிமன்றம் கூடிய நிலையில், மதியம் 3:00 மணிக்கு தீர்ப்பளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி குற்றம் சாட்டப்பட்ட ஐவர், சி.பி.சி.ஐ.டி., போலீசார் நீதிமன்றத்தில் ஆஜராகினர். வழக்கில் இருந்து அவர்களை விடுதலை செய்வதாக நீதிபதி புஷ்பராணி தீர்ப்பளித்தார்.