பரமக்குடி: பரமக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ராமநாதபுரம் மாவட்ட அளவிலான மூத்தோர் தடகள விளையாட்டுப் போட்டிகள் நடந்தது. போட்டிகள் 30 முதல் 35 வயது என ஒவ்வொரு 5 வயது இடைவெளியில் 75 முதல் 80 வயது வரை 10 பிரிவுகளில் நடத்தப்பட்டது. ஆண்கள், பெண்கள் என தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன. ஓட்டம், தடை ஓட்டம், நடை பந்தயம் உட்பட பல்வேறு துாரங்களின் அடிப்படையில் போட்டி நடந்தது. இதில் தனிப்பிரிவு சி.ஐ.டி., இன்ஸ்பெக்டர் மாரியப்பன் 52, ஓய்வு பெற்ற இன்ஸ்பெக்டர் முருகேசன் 80, எஸ்.ஐ., அந்தோணி சகாய சேகர் 52, ஓய்வு பெற்ற ஆசிரியர் சிவ பாலசுந்தர் 62, டாக்டர் சுந்தரமூர்த்தி 52, எஸ்.ஐ., கள் சண்முகம் 52, முரளி 52, நம்பி ராஜன் 52, ஆசிரியர் மரிய ஆக்னஸ் 47, பால சரவணன் 52, உட்பட பலர் வெற்றி பெற்றனர். போட்டிகளில் நுாறுக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். முதல் மூன்று இடம்பெற்றவர்கள் டிச., 20, 21ம் தேதிகளில் காரைக்குடி அழகப்பா பல்கலையில் நடக்க உள்ள மாநில அளவிலான மூத்தோர் போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். மூத்த வீரர்களை ஊக்குவிக்கவும், உற்சாகப்படுத்தும் விதமாகவும், ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் போட்டிகள் நடத்தப்படுவதாக தெரிவித்தனர். வெற்றி பெற்றவர்களுக்கு டாக்டர் முத்தையா பரிசுகளை வழங்கினார். ராமநாதபுரம் மூத்தோர் தடகள சங்க தலைவர் ஹனிபா, செயலாளர் சிவ பாலசுந்தர், பொருளாளர் பால சரவணன், வக்கீல் பசுமலை, ஆசிரியர் கார்த்திகேயன், டாக்டர் சுந்தரமூர்த்தி ஏற்பாடுகளை செய்தனர்.