| ADDED : டிச 12, 2025 05:33 AM
முதுகுளத்துார்: தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக முதுகுளத்துார் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு மாணவர்களை ஏற்றிச் செல்வதற்காக பள்ளி நேரத்தில் அரசு பஸ் மீண்டும் இயக்கப்பட்டது. முதுகுளத்துார் அரசு மேல்நிலைப் பள்ளியில் காக்கூர், ஏனாதி, கீழக்காஞ்சிரங்குளம், இளஞ்செம்பூர், சித்திரங்குடி, கீழச்சாக்குளம் உட்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 300க்கு அதிகமான மாணவர்கள் படிக்கின்றனர். பஸ் ஸ்டாண்டில் இருந்து 2 கி.மீ., ல் பள்ளி உள்ளது. இதனால் மாணவர்களின் நலன் கருதி காலை மாலையில் பள்ளி நேரத்தில் அரசு பஸ் இயக்கப்பட்டு வந்தது. தற்போது அந்த அரசு பஸ் இயக்கப்படவில்லை. பள்ளி முடிந்து கிராமப் பகுதிகளுக்கு செல்வதற்காக மாணவர்கள் 2 கி.மீ., நடந்து செல்வதால் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் இயக்கப்படும் பஸ்களை பிடிப்பதற்காக வேறு வழியின்றி இவ்வழியில் வரும் சரக்கு வாகனம், டூவீலரில் லிப்ட் கேட்டு செல்லும் நிலை உள்ளது. இதுகுறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக முதுகுளத்துார் பஸ் பணிமனையில் இருந்து பள்ளி நேரத்தில் மாணவர்களை அழைத்துச் செல்வதற்காக மீண்டும் அரசு பஸ் இயக்கப்பட்டது. எனவே ஆபத்தான முறையில் செல்லாமல் புதிதாக இயக்கப்பட்ட அரசு பஸ்சை மாணவர்கள் பயன்படுத்த வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.