பாம்பனில் சுருக்கு மடி மீன்பிடிப்பு; ரூ.25 ஆயிரம் மீன்கள் பறிமுதல்
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் அருகே பாம்பனில் தடை செய்த சுருக்கு மடியில் பிடித்த மீனை மீன்துறையினர் பறிமுதல் செய்து ரூ.25 ஆயிரத்திற்கு ஏலம் விட்டனர். மீன் வளத்தை அழிக்க கூடிய சுருக்கு மடி, இரட்டை மடியில் மீன் பிடிக்க மீன்துறையினர் தடை விதித்தனர். இந்நிலையில் சட்ட ரீதியாக மீனவர்கள் நடத்திய போராட்டத்தால் திங்கள், வியாழக் கிழமையில் சுருக்கு மடியில் மீன்பிடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் ராமேஸ்வரம், பாம்பன், தனுஷ்கோடி பகுதியில் உள்ள நாட்டுப் படகு மீனவர்கள் தடையை மீறி வாரம் முழுவதும் மன்னார் வளைகுடா, பாக்ஜலசந்தி கடலில் மீன்பிடிப்பது தொடர் கதையாக உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பாம்பன் நாட்டுப்படகு மீனவர்கள் தடைமீறி மன்னார் வளைகுடா கடலில் சுருக்கு மடியில் மீன் பிடித்து விட்டு மீனை பாம்பன் தெற்குவாடி கடற்கரை யில் விற்க முயன்றனர். தகவலறிந்த ராமேஸ்வரம் மீன்துறை உதவி இயக்குனர் தமிழ்மாறன், மீன்துறை அதிகாரிகள் விரைந்து சென்று மீனை பறிமுதல் செய்து ஏலத்தில் விற்றனர். இதில் ரூ.25 ஆயிரம் மீன்துறைக்கு வருவாயாக கிடைத்தது. சுருக்கு மடியில் மீன் பிடித்த மீனவர்கள் யார் என மீன்துறையினர் விசாரிக்கின்றனர்.