ராமநாதபுரம்; நேற்று தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் முருகன் கோயில்களில் சிறப்பு அபிேஷகம், அலங்காரத்தில் பூஜைகள் நடந்தது. ராமநாதபுரம் குண்டுக்கரை சுவாமிநாத சுவாமி கோயில் தைப்பூச விழா, விநாயகர் பூஜை, விபூதி அலங்காரம், திபாராதனை, செக்கநாதர் கோயிலில் பால்குடம், காவடி எடுத்து சுவாமிக்கு பாலாபிஷகம், அலங்காரத்தில் வழிபாடும், உற்ஸவ மூர்த்திக்கு அபிேஷகம், தீபாராதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.குமரய்யா கோயிலில் வள்ளி, தெய்வானை சமேத முருகனுக்கு அபிேஷகம், அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. பட்டணம்காத்தான் கலெக்டர் அலுவலகம் அருகே வினைதீர்க்கும் வேலர் கோயில் , நீச்சல் குளம் அருகே மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் உள்ள பாலமுருகன் சன்னதியில் சுவாமி மற்றும் அம்மனுக்கு அபிேஷகம், அலங்காரத்தில் தீபாராதனை, கந்தசஷ்டி பஜனை வழிபாடு நடந்தது.வெளிப்பட்டணம் பாலதண்டாயுதபாணி சுவாமி கோயில், ராமநாதபுரம் வடக்கு தெரு பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் பாலாபிேஷகம், அலங்காரத்தில் சுவாமிக்கு தீபாராதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.*திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் முருகன் சன்னதியில் பால், பன்னீர், பஞ்சாமிர்தம், சந்தனம், விபூதி போன்றவைகளால் சிறப்பு அபிேஷகம் நடந்தது. அதனை தொடர்ந்து வள்ளி, தெய்வானையுடன் முருகன் மலர்களால் அலங்கரிக்கப்பட்டார். கந்தசஷ்டி கவசம் போன்ற பக்தி பாடல்களை பாடினர்.தொண்டி அருகே நம்புதாளை பாலமுருகன் கோயிலில் சிறப்பு பூஜை, அபிேஷகம் நடந்தது. வள்ளி, தெய்வானையுடன் பாலமுருகன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.*கமுதி அருகே மேலக்கொடுமலுார் குமரக்கடவுள் முருகன் கோயிலில் சிறப்பு பூஜை நடந்தது. முதுகுளத்துார், கமுதி, அபிராமம், பரமக்குடி உள்ளிட்ட பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் பாத யாத்திரையாக கொடுமலுார் முருகன் கோயிலுக்கு வந்தனர். 33 வகை அபிஷேகங்கள் நடந்தது. சிவாச்சாரியார் நவநீதகிருஷ்ணன் தலைமையில் சிறப்பு பூஜைகள் நடந்தது.முதுகுளத்துார் முருகன் கோயில், வழிவிடு முருகன் கோயில், செல்வி அம்மன் கோயில், பத்ரகாளியம்மன் கோயில், கமுதி முருகன் கோயில், முத்துமாரியம்மன் உள்ளிட்ட பல்வேறு முருகன் கோயிலில் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது.*திருப்புல்லாணி பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் 16 வகை அபிஷேகம், பஞ்சமுக தீபாராதனை நடந்தது. பூஜைகளை ஜெகநாத சாஸ்திரி, ஹேமந்த் சாஸ்திரி ஆகியோர் செய்திருந்தனர். பெண்கள் நெய் தீபமேற்றி வழிபாடு செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.திருப்புல்லாணி அருகே தினைக்குளம் சாலையில் உள்ள சக்திவேல் முருகன் கோயிலில் கணபதி ஹோமம் உள்ளிட்ட யாக வேள்விகள் செய்யப்பட்டு கலசங்களில் புனித நீரால் மூலவர் சக்திவேல் முருகனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. கோயில் டிரஸ்டி குருசாமி, பாப்பா ஆகியோரால் புதிதாக வெள்ளிக் கவசம் செய்யப்பட்டு மூலவருக்கு அணிவிக்கப்பட்டது. அன்னதானம் வழங்கப்பட்டது.* வண்ணாங்குண்டு அருகே வடக்கு மேதலோடையில் பாலதண்டாயுதபாணி சுவாமி கோயிலில் ஜன.16ல் காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. நேற்று காலை 9:00 மணிக்கு மேதலோடை பெரிய ஊருணியில் இருந்து பால்காவடி, இளநீர் காவடி, 12 அடி நீளம் அலகு குத்தி நேர்த்திக்கடன் பக்தர்கள் கிராமத்தின் முக்கிய வீதிகளின் வழியாக மேளதாளங்கள் முழங்க வந்தனர்.மேதலோடை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் நீண்ட வரிசையில் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் இடும்பன் பூஜையுடன் விழா நிறைவடைந்தது.