| ADDED : நவ 23, 2025 04:41 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் ராமலிங்க விலாசம் அரண்மனை 300 ஆண்டுகளைக் கடந்தும் ஓவியக்கலையின் பிரமாண்டமாக திகழ்கிறது. ராமநாதபுரத்தில் உள்ள ராமலிங்க விலாசம் அரண்மனை கி.பி.1674-1710 காலக்கட்டத்தில் ஆட்சி செய்த கிழவன் சேதுபதியால் கட்டப்பட்டது. ராமநாதபுரம் நகருக்கு மத்தியில் கருவறை, அர்த்த மண்டபம் என ஒரு கோயிலின் அமைப்புடன் காணப்படும் கோட்டையுள் ராமலிங்கவிலாசம் உள்ளது. இந்த மண்டபத்தில் உள்ள 24 துாண்கள் திருமலை நாயக்கர் மகாலின் சாயலில் உள்ளது. இதனுள் சேதுபதி மன்னர்கள் நவராத்திரி விழாவைச் சிறப்பாக கொண்டாடுவர். ராமலிங்க விலாசம் வழக்கமான கட்டடக் கலையை கொண்டு காணப்பட்டாலும் சுவர் முழுக்க தீட்டப்பட்டுள்ள ஓவியங்கள் மற்ற மாளிகையில் இருந்து வேறுபடுத்தி காட்டுகிறது. இலக்கியத்திலும், கலையிலும் ஈடுபாடு கொண்ட முத்து விஜய ரகுநாத சேதுபதி கி.பி.,1725ல் கோயில்கள், ராமாயணத்தின் பாலகாண்டப் பகுதி, பாகவத காட்சிகள், சைவ, வைணவ ஓவியங்கள், சேதுபதி மன்னர்களின் வாழ்வில் நடந்த முக்கிய நிகழ்வுகளை ராமலிங்க விலாசத்தில் ஓவியமாக இடம்பெற செய்தார். ஆயர்பாடியில் கிருஷ்ணர் புரிந்த வீரச் செயல்கள் தத்ரூபமாக காட்சியளிக்கின்றன. சேதுபதி மன்னர்களின் வரலாற்றை கூறும் வகையில் ரகுநாத சேதுபதிக்கும் தஞ்சை மராட்டிய மன்னர் சரபோஜிக்கும் நடந்த போர், மதுரை நாயக்கர் சேதுபதிக்கு ரத்தின பட்டாபிஷேகம் செய்தல், சேதுபதி மன்னர்களின் ஐரோப்பியத் தொடர்பு முதலிய வரலாற்று நிகழ்வுகள் இடம் பெற்றுள்ளன. மேல் மாடியில் உள்ள ஓவியங்களில் சேதுபதி மன்னரின் அகவாழ்வியல் இடம் பெற்றுள்ளது. ஒவ்வொரு ஓவியத்தின் கீழும் அதன் விளக்கங்கள் தமிழிலும், தெலுங்கிலும் எழுத்தப்பட்டுள்ளன. இந்த ஓவியங்களில் வட்டாரப் பழக்க வழக்கங்களின் தாக்கம் அதிகம் காணப்பட்டாலும் இயக்க உத்திமுறையில் வரையப்பட்டுள்ளதால் பிற ராமாயண ஓவியங்களில் இருந்து தனித்துவமாக காணப்படுகிறது. தென்னிந்தியாவின் ஓவியங்களில் ராமாயண கதையை கண்முன் நிறுத்துவதால் ராமேஸ்வரத்திற்கு வரும் வடமாநில சுற்றுலாப் பயணிகள் பெரும்பாலும் ராமாயண ஓவியங்களை காண வேண்டும் என்ற ஆர்வத்தில் ராமநாதபுரம் அரண்மனைக்கு வருவது சமீப காலமாக அதி கரித்துள்ளது. தமிழக அரசு 1978 முதல் ராமலிங்க விலாச ஓவியத்தை பாதுகாக்கப்பட்ட சின்னமாக அறிவித்து பாதுகாத்து வருகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த ராமலிங்க விலாசம் அரண்மனையை தமிழக அரசின் தொல்லியல் துறை 1978ல் பாதுகாக்கப்பட்ட சின்னமாக அறிவித்தது. தற்போது ராமலிங்க விலாசம் சேதுபதி மன்னர்களின் வரலாற்றை கூறும் அருங்காட்சியகமாக உள்ளது.கடந்த ஒரு வாரம் நடந்த நவராத்திரி விழாவை முன்னிட்டு பரதநாட்டியம், பொம்மலாட்டம், பட்டிமன்றம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் அரண்மனையில் நடந்தன.