| ADDED : ஜூலை 01, 2024 03:35 AM
இடைப்பாடி: இடைப்பாடி, பூலாம்பட்டி, தேவூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இடி மின்னல், சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதனால் இடைப்பாடி, அதன் சுற்றுப்பகுதிகளில் மாலை முதல் இரவு, 8:00 மணி வரை, பெரும்பாலான இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பல இடங்களில் மரங்கள் சாய்ந்தன.தேவூர் அதன் சுற்றுப்பகுதிகளில் பல்வேறு இடங்களில் விவசாயிகள் சாகுபடி செய்த கரும்புகள் உள்ளிட்டவை சாய்ந்தன. தேவூரில் இருந்து சங்ககிரி செல்லும் பிரதான சாலையான அம்மாபாளையத்தில், மின்கம்பம் உடைந்து, தென்னை மரம் மீது விழுந்தது. இதில் மரமும், மின்கம்பமும் சாலையில் விழுந்தன. இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.வருவாய்த்துறையினர், தென்னை மரத்தை அகற்றி மின் வாரிய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள், உடைந்த மின் கம்பத்தை அகற்றி விட்டு, அப்பகுதியில் மின்சாரம் தடையின்றி செல்ல நடவடிக்கை எடுத்தனர். அதேபோல் குள்ளம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம் முன் ஒரு மரம் சாய்ந்ததில் மின் ஒயர் அறுந்து விழுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.