| ADDED : ஆக 02, 2024 01:41 AM
சேலம், சேலம் மாவட்டத்தில் நடந்து வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் பிருந்தாதேவி முன்னிலை வகித்தார். அதற்கு தலைமை வகித்து, மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சங்கர் பேசியதாவது:மாவட்டத்தில், 'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம், கடந்த மாதம், 11 முதல், 31 வரை நடந்தது. இதில், 36,380 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. மனுக்கள் மீது, 30 நாட்களுக்குள் தீர்வு காண அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. முதல்வரின் காலை உணவு திட்ட செயல்பாடு, சமத்துவபுர புனரமைப்பு பணி, இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் கட்டப்பட்டு வரும் வீடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மக்களின் அடிப்படை தேவைகளுக்கு முக்கியத்துவம் அளித்து அலுவலர்கள் பணியாற்ற வேண்டும். அரசின் திட்டங்களை விரைவாக செயல்படுத்தி மக்களிடம் கொண்டு சேர்க்க, அனைத்து துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.மாநகராட்சி கமிஷனர் ரஞ்ஜீத் சிங், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் கலெக்டர் லலித் ஆதித்ய நீலம், டி.ஆர்.ஓ., மேனகா, எஸ்.பி., அருண்கபிலன் உள்ளிட்ட அனைத்து துறை அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.