மகுடஞ்சாவடி, இடங்கணசாலை பஸ் ஸ்டாண்டில் சுற்றுலா உள்ளிட்ட ஏராளமான வாகனங்கள், பஸ்களுக்கு இடையூறாக நிறுத்தப்படுகின்றன. அங்குள்ள நிழற்கூடத்தை, 'குடி'மகன்கள் படுக்கும் இடமாகவே பயன்படுத்துகின்றனர். புறக்காவல் நிலையம் பூட்டியே உள்ளது.சிறுநீர் கழிப்பிடத்தை பராமரிக்காததால் துர்நாற்றம் வீசி தொற்று ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. இதுபோன்ற ஏராளமான பிரச்னைகளால் பஸ் ஸ்டாண்டுக்கு வந்து செல்லும் பள்ளி மாணவியர், பெண்கள் உள்ளிட்ட பயணியர் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.சேலம் மாவட்டம் இடங்கணசாலை பஸ் ஸ்டாண்ட், ஒருங்கிணைந்த சிறப்பு, நடுத்தர நகர அபிவிருத்தி திட்டத்தில், 30 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு, 2007 ஜூன், 26ல் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. அங்கு, 30 கடைகள், கட்டண கழிப்பிடம், மாற்றுத்திறனாளிகளுக்கு இரு கழிப்பிடம், பொது சிறுநீர் கழிப்பிடம், பயணியர் நிழற்கூடம், பாலுாட்டும் அறை ஆகியவை உள்ளன. ஆனால் எதுவும் சரியாக பராமரிக்கப்படாததால் பயணியர், பஸ் டிரைவர்கள், பள்ளி, கல்லுாரி மாணவியர், பெண்கள் உள்ளிட்டோர் தினமும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.தி.மு.க.,வை சேர்ந்த, இடங்கணசாலை நகராட்சி தலைவர் கமலக்கண்ணன் கூறுகையில், ''தனியார் வாகனங்களை நிறுத்த அனுமதிக்கக்கூடாது என, போலீசில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. பாலுாட்டும் அறை, மாற்றுத்திறனாளி கழிப்பறை பயன்பாட்டில் உள்ளன. உயர்மின்கோபுர மின்விளக்கு எரிகிறது. சிறுநீர் கழிப்பிடம் சுகாதாரமாகவே உள்ளது. குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணப்படும்,'' என்றார்.உள்ளே வராத பஸ்கள்இடங்கணசாலை பஸ் ஸ்டாண்டில் இருந்து சேலம், ஆட்டையாம்பட்டி, ஜலகண்டாபுரம், சங்ககிரி, இடைப்பாடி, கே.ஆர்.தோப்பூர், ஓமலுார் பகுதிகள் என, 70க்கும் மேற்பட்ட அரசு, தனியார் பஸ்கள், 3 மினி பஸ்கள் இயக்கப்படுகின்றன. தினமும், 5,000க்கும் மேற்பட்ட பயணியர் வந்து செல்கின்றனர். ஜவுளி எடுக்க வருவோர், மருத்துவமனைகளுக்கு வருவோர், பஸ் ஸ்டாண்டில் வாகனங்களை நிறுத்துகின்றனர். சுற்றுலா வேன்களும் நிறுத்தப்படுவதால், பஸ்களுக்கு இடையூறாக உள்ளது. பஸ்கள் வந்து செல்லவும் இடம் குறைவாக உள்ளதால் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. தனியார் வாகனங்களை நிறுத்தினால் அபராதம் விதிக்க வேண்டும். மேலும் தனியார் பஸ்கள் பஸ் ஸ்டாண்ட் உட்புறம் செல்லாமல் சின்னப்பம்பட்டி பிரதான சாலையில் நின்று செல்வதால் பயணியர் பஸ்சை தவறவிடுகின்றனர்.- எம்.மாரிமுத்து, 52, தையல் தொழிலாளி, இளம்பிள்ளைகேலி, கிண்டலால் தொல்லைபஸ் ஸ்டாண்ட் அருகே இரு டாஸ்மாக் கடைகள் உள்ளன. அங்கு மது வாங்கி குடிப்போர், பஸ் ஸ்டாண்டில் நிற்கும் பெண் பயணியருக்கு இடையூறு செய்கின்றனர். சில நேரங்களில் அங்குள்ள நிழற்கூடத்தில், 'குடி'மகன்கள் படுத்து விடுகின்றனர். வாந்தி எடுத்து அசுத்தம் செய்கின்றனர். அங்குள்ள போலீஸ் புகார் பெட்டிக்கு பூட்டு போடாமல் கயிற்றால் கட்டியுள்ளனர். அதனால் யாரும் புகார் கடிதம் போடுவதில்லை. பஸ்கள் வந்து செல்லும் நுழைவாயில் அருகே ேஷர் ஆட்டோக்களை நிறுத்துவதால் விபத்து அபாயம் நிலவுகிறது. பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள புறக்காவல் நிலையம் பூட்டியே உள்ளது. காலை, மாலையில் மாணவியர் வரும்போது, சில வாலிபர்கள் கேலி, கிண்டல் செய்கின்றனர். அந்த நேரங்களில் போலீசார், பஸ் ஸ்டாண்டில் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.- எஸ்.பெரியசாமி, 50, இருசக்கர வாகன மெக்கானிக், இளம்பிள்ளை.பராமரிப்பற்ற கழிப்பிடம்பயணியருக்கு குடிநீர் வசதியில்லை. தொட்டி அமைக்க வேண்டும். சிறுநீர் கழிப்பிடத்தை பராமரிப்பதில்லை. துர்நாற்றத்தால் பஸ்சுக்கு காத்திருக்கும் பயணியர் அவதிப்படுகின்றனர். உயர்கோபுர மின்விளக்கு பெரும்பாலான நேரங்களில் எரிவதில்லை. பெண் பயணியர் இரவில் அச்சத்துடன் காத்திருக்கும் நிலை உள்ளது. பாலுாட்டும் அறையில் உள்ள கழிப்பிடம், பழைய பொருட்களை போட்டு வைக்கும் குடோனாக மாறியுள்ளது. மாற்றுத்திறனாளி கழிப்பறை, சில ஆண்டுகளாக பூட்டியே காணப்படுகிறது. நிழற்கூடம் போதிய எண்ணிக்கையில் இல்லாததால் மழை, வெயிலில் பயணியர் சிரமப்படுகின்றனர்.-- வி.கணேசன், 52,அ.தி.மு.க., பிரமுகர், இளம்பிள்ளை