நாமகிரிப்பேட்டை: ''கடந்த, 3 ஆண்டுகளில், 14,500 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கியது, தி.மு.க., அரசின் சாதனை,'' என, எம்.பி., ராஜேஸ்குமார் பேசினார். நாமகிரிப்பேட்டை ஒன்றிய, தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம், ஒன்றிய செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான ராமசுவாமி தலைமையில் நடந்தது. மாவட்ட செயலாளரும், எம்.பி.,யுமான ராஜேஸ்குமார் கலந்துகொண்டு, கூட்டணி கட்சி வேட்பாளர் மாதேஸ்வரனை ஆதரித்து பேசியதாவது: தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்றதும், முதல்வர் ஸ்டாலின் ஆணைப்படி, கடந்த மூன்றாண்டில் வீடு இல்லாத ஏழை, எளிய மக்களுக்கு சிறப்பு முகாம் நடத்தப்பட்டு, நாமக்கல் மாவட்டத்தில், 14,500 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. ராசிபுரம் நகராட்சி, பிற்பட்டோர் காலனி, இந்திரா நகர், ராசிபுரம் ஒன்றியம்- முத்துக்காளிப்பட்டி, வெண்ணந்துார் ஒன்றியம் தேங்கல்பாளையம், சவுதாபுரம், நாமகிரிப்பேட்டை ஒன்றியம் நாரைகிணறு, கார்கூடல்பட்டி, முள்ளுக்குறிச்சி, ஆயில்பட்டி, பிள்ளாநல்லுார், ஆர்.புதுப்பட்டி, சீராப்பள்ளி, மோகனுார் பேட்டபாளையம், சேந்தமங்கலம், புதுச்சத்திரம் ஒன்றியம் ஏளூர், எருமப்பட்டி ஒன்றியம் காவகாரன்பட்டி ஆகிய பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையேற்று, வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டன.மேலும், முன்னாள் முதல்வர்கள் அண்ணாதுரை, காமராஜர், கருணாநிதி ஆகியோருக்கு பின், ஏழை, எளிய மக்களின் குழந்தைகள் காலையில் பள்ளிக்கு பசியோடு போகக்கூடாது என்ற உன்னத நோக்கத்தோடு, முதல்வர் ஸ்டாலின் இந்தியாவே போற்றும் வகையில் காலை உணவு திட்டத்தை கொண்டு வந்தார். இதுபோன்ற திட்டங்கள் இந்தியாவிற்கு முன்னோடி திட்டமாக உள்ளன.இவ்வாறு அவர் பேசினார். ஒன்றிய அவைத்தலைவர் கருப்பண்ணன், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் சண்முகம், மாவட்ட வர்த்தகர் அணி அமைப்பாளர் சிவக்குமார், மாவட்ட தொண்டரணி தலைவர் பூபதி, மாவட்ட மகளிரணி அமைப்பாளர் ஜோதி, மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் ரமேஷ்குமார் மற்றும் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள், சார்பு அணி நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.