சேலம் : மழைநீர் வடிகால் பணியால் வியாபாரம் பாதிக்கப்படுவதோடு வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணிக்கும் அவலம் தொடர்கிறது. இதனால் அப்பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.மழைக்காலங்களில் சேலம், சிவதாபுரம் அருகே சேலத்தாம்பட்டி ஏரி நிரம்பி சாலையில் தண்ணீர் ஓடுவதால் அப்பகுதி மக்கள், வியாபாரிகள் அவதிக்குள்ளாகினர். சிவதாபுரத்தை சுற்றியுள்ள எம்.ஜி.ஆர்., நகர், அம்மன் நகர், பொதியன் தெரு உள்பட, 10க்கும் மேற்பட்ட தெருக்களில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து குளம்போல் தேங்கியது. இதை கண்டித்து மக்கள், சாலை மறியலில் ஈடுபட்ட பின், கலெக்டர், மாநகராட்சி கமிஷனர் ஆய்வு செய்தனர். தொடர்ந்து மழைநீர் வடிகால் கட்டுமான பணி மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது.அதன்படி மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஒருங்கிணைந்த சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில், 2 கோடி ரூபாய் மதிப்பில் சித்தர்கோவில் பிரதான சாலையோரம் மழைநீர் வடிகால் கட்டும் பணி, 2023 டிசம்பரில் தொடங்கப்பட்டது. ஆனால் இப்பணி முழுமையின்றி, குறிப்பிட்ட பகுதிகளில் இடைவெளி விட்டு கட்டப்பட்டுள்ளது. விடுபட்ட பகுதிகளில் எச்சரிக்கை பலகையும் இல்லை. இதனால் மழை பெய்யும்போது, சாலை முழுதும் தண்ணீர் தேங்கி, பள்ளம் எங்குள்ளது என தெரியாமல், வாகன ஓட்டிகள் தடுமாறி ஒரு வித அச்சத்துடன் பயணிக்கின்றனர். சிலர் விபத்தில் சிக்கி காயம் அடைந்துள்ளனர்.கந்தம்பட்டி பிளாஸ்டிக் வியாபாரி எம்.முத்துராமன், 37: வடிகால் கட்டுமான பணி, 8 மாதங்களாக நடக்கிறது. சில இடங்களில் விடுபட்டுள்ள நிலையில் கட்டப்பட்டுள்ளது. அப்பகுதியில் இருந்து மழைநீர் வெளியேறி சாலை, கடைகளுக்குள் புகுந்து விடுகிறது. வியாபாரம் செய்ய முடியவில்லை. மேலும் மாநகராட்சி பள்ளியில் மழைநீர் தேங்குகிறது. வடிகால் பணியை விரைந்து முடிக்க வேண்டும்.பனங்காடு, வெள்ளி பட்டறை தொழிலாளி என்.செல்வம், 53: கடைகளுக்கு முன் மழைநீர் வடிகால் பணி கட்டாமல் விடப்பட்டுள்ளது. இப்பகுதியில் கடந்த வாரம் மழை பெய்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்தவர் விழுந்து விபத்தில் சிக்கினார். மேலும் இங்கு மழைநீருடன் கழிவுநீர் கலப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. இதை சீர்செய்து தந்தால் உதவியாக இருக்கும்.சிவதாபுரம், டீக்கடை உரிமையாளர் வி.சீனிவாசன், 40: என் டீக்கடை முன், 3 மாதங்களாக சாக்கடை கலந்த மழைநீர் தேங்கி உள்ளது. அத்துடன் மேட்டூர் குடிநீர் குழாய் உடைந்து சாலை சிதலமடைந்து வருகிறது. மேலும் கடைக்கு வருவோர், மூக்கை பிடித்தபடி வரும் அவலம் உள்ளது. போக்குவரத்து நெரிசலால் சிலர் கடைக்கு வராமல் அப்படியே சென்று விடுகின்றனர். இதனால் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து மாநகராட்சி, 22வது வார்டு கவுன்சிலர் செல்வராஜ் கூறுகையில், ''வடிகால் கட்டும் பணி விரைந்து முடிக்கப்படும். குடிநீர் குழாய் உடைப்பும் சீர்செய்யப்படும்,'' என்றார்.நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது: வடிகால் கட்டும் பணி, 2 கோடி ரூபாய் மதிப்பில் நடந்து வருகிறது. சிவதாபுரம் தனியார் பள்ளியில் தொடங்கி கந்தம்பட்டி ரயில்வே மேம்பாலம் வரை, 950 மீ., நீளத்துக்கு, வடிகால் ஆழம், 6 அடி, அகலம், 5 அடி அளவுக்கு பணி நடக்கிறது. கோனேரிக்கரை ஓடையில் இணைக்கப்பட்டுள்ளது. இதில், 900 மீ., பணி நிறைவடைந்துள்ளது. மீதி, 50 மீ., பணியை விரைந்து முடித்து, சாலையில் மழைநீர் தேங்குவது தடுக்கப்படும். வடிகால் இடையே விடப்பட்டுள்ள பகுதி, மழை காலங்களின்போது விடப்பட்டது. அங்கும் பணி விரைந்து முடிக்கப்படும். இப்பணிக்கு ஓராண்டு ஒப்பந்த காலம். இருப்பினும் அதற்கு முன்னதாகவே பணி முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.