ஒகேனக்கல்:கர்நாடகா அணைகளில் இருந்து காவிரியாற்றில் திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு, 50,500 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப ஒகேனக்கல் நீர் வரத்தும் அதிகரித்துள்ளது.காவிரி நீர்பிடிப்பு பகுதிகளான கேரளாவின் வயநாடு, கர்நாடகாவின் மைசூர், மாண்டியா, ஹாசன் உள்ளிட்ட பகுதிளில் தென்மேற்கு பருவமழை தீவிரத்தால், கர்நாடகாவிலுள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கபினி அணை தனது முழு கொள்ளளவை எட்டியதால், அணை பாதுகாப்பு கருதி, வரத்தாகும் தண்ணீர் அப்படியே காவிரியில் திறக்கப்படுகிறது. நேற்று கபினியில் வினாடிக்கு, 45,000 கன அடி, கே.ஆர்.எஸ்., அணையில், 5,500 கன அடி என, 2 அணைகளில் இருந்தும் காவிரியாற்றில் திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு, 50,500 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கணக்கீட்டின் படி, நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு வினாடிக்கு, 21,000 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று, மாலை, 5:00 மணிக்கு வினாடிக்கு, 22,000 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால், ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து அதிகரித்து, மெயின் அருவி, மெயின் பால்ஸ், சினி பால்ஸ், ஐந்தருவி, ஐவர்பாணி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.இதனால் நேற்று, 2வது நாளாக காவிரியாற்றில் குளிக்கவும், பரிசல் இயக்கவும், தர்மபுரி மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. நீர்வீழ்ச்சிக்கு செல்லும் நடைப்பாதை மூடப்பட்டு, போலீசார் மற்றும் வருவாய் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
7 அடி உயர்வு
சேலம் மாவட்டம், மேட்டூர் அணை மொத்த நீர்மட்டம், 120 அடி. நீர் இருப்பு, 93.47 டி.எம்.சி., கடந்த, 3ல் அணை நீர்மட்டம், 39.65 அடியாகவும், நீர் இருப்பு, 11.91 டி.எம்.சி.,யாகவும் இருந்தது. அதன் பின் காவிரி நீர்பிடிப்பு பகுதியில், தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததால், கர்நாடகாவின் கபினி அணை நிரம்பியது. அணையில் இருந்து உபரி நீர் மேட்டூர் அணைக்கு திறக்கப்பட்டது.அதற்கேற்ப நேற்று முன்தினம், 44.62 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று, 46.80 அடியாகவும், 14.59 டி.எம்.சி.,யாக இருந்த நீர் இருப்பு நேற்று, 15.85 டி.எம்.சி.,யாக உயர்ந்தது.கடந்த, 15 நாட்களில் மேட்டூர் அணை நீர்மட்டம், 7 அடியும், நீர் இருப்பு, 4 டி.எம்.சி.,யும் உயர்ந்துள்ளது. நேற்று அணைக்கு வினாடிக்கு, 20,910 கனஅடி நீர் வந்தது. வினாடிக்கு, 1,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது.