சேலம்:பாஸ்போர்ட் வெரிபிகேஷன் பணிகளை விரைவாக முடிக்கும் வகையில், 1,675 போலீஸ் ஸ்டேஷன்களுக்கு, 'டேப்' எனும் கையடக்க கணினி வழங்கப்பட்டுள்ளது.வெளிநாடுகளுக்கு செல்வோருக்கு, இன்றியமையாத ஆவணமாக பாஸ்போர்ட் உள்ளது. தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்திலும், ஆண்டுக்கு, 2 லட்சம் பாஸ்போர்ட்கள் வழங்கப்படுகின்றன. புதிதாக பாஸ்போர்ட் விண்ணப்பித்த பின், அதன் விபரங்கள் சம்பந்தப்பட்ட மனுதாரர் எல்லைக்குட்பட்ட போலீஸ் ஸ்டேஷன்களுக்கு அனுப்பப்படுகிறது.அங்குள்ள போலீசார், பெயர், முகவரி, ஆதாரங்கள் ஆகியவற்றை சரிபார்த்து, ஒப்புதல் அளித்த பின்பே, விண்ணப்பம் பரிசீலிக்கப்படும். 7 முதல், 15 நாட்களுக்குள் பாஸ்போர்ட் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தாலும், மூன்று மாதங்கள் வரை தாமதம் ஏற்படுகிறது. பாஸ்போர்ட் பெறுவதில் ஏற்படும் தாமதத்துக்கு, போலீஸ் சரிபார்ப்பில் நடக்கும் தாமதமே காரணம் என, பாஸ்போர்ட் அலுவலக தரப்பில் தெரிவித்து விடுகின்றனர். இதனால், போலீசார் மீது, பொதுமக்களுக்கு அதிருப்தி ஏற்படுகிறது.இதை தவிர்க்கவும், பணிகளை விரைவு படுத்தவும் தமிழகத்தில் உள்ள, 1,675 போலீஸ் ஸ்டேஷன்களுக்கும், 'டேப்' எனும் கையடக்க கணினி வழங்கப்பட்டுள்ளது. இவற்றில், துல்லியமாக சான்றிதழ்களை ஸ்கேன் செய்து, உடனுக்குடன் 'அப்லோடு' செய்யும் வகையில், புதிய வசதிகள் உள்ளன. இதன் மூலம், சரிபார்த்த உடன், அதற்கான ஒப்புதலை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:பாஸ்போர்ட் வெரிபிகேஷனுக்கு, பொதுமக்களை அலைக்கழிக்காமல், உடனுக்குடன் பணிகளை முடித்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது அனைத்து ஸ்டேஷன்களுக்கும், புதிய வசதிகளுடன் கூடிய கையடக்க கணினி வழங்கப்பட்டுள்ளது. புது டேப் என்பதால், அதில் பழகவும், அதில் சிறு சிறு கோளாறுகளை சரி செய்யும் பணிக்கும், தற்போது அவகாசம் எடுக்கிறது. சரி செய்த பின், போலீஸ் தரப்பிலிருந்து சிறிதும் தாமதம் ஏற்படாத வகையில் பணிகள் மேற்கொள்ளப்படும்.இவ்வாறு கூறினர்.