சேலம்: சேலம் கோட்ட அரசு, தனியார் பஸ்கள், தி.மு.க., இளைஞரணி மாநாட்டுக்கு திருப்பி விடப்பட்டதால், நான்கு மாவட்டங்களில் இருந்து முக்கிய நகரங்களுக்கு இயக்கப்பட்ட பஸ்களின் இயக்கம் குறைக்கப்பட்டது. கிராம புறங்களுக்கான சேவை நிறுத்தத்தால் பயணிகள் கடும் அவதியை சந்தித்தனர்.சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில், தி.மு.க.,வின், இரண்டாவது இளைஞரணி மாநாடு நேற்று நடந்தது. இதற்கு தொண்டர்கள், அக்கட்சியினரை அழைத்து வர சேலத்தில் இருந்து, 300, தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகியில் தலா, 150 தனியார் பஸ்கள் மாநாட்டுக்கு திருப்பி விடப்பட்டது.இதனால், இந்த நகரங்களில் இருந்து கிராமங்களுக்கு இயக்கப்பட வேண்டிய பஸ்கள் நிறுத்தப்பட்டதால், கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு அவசர பணிக்கு கூட வர முடியாமல் பொதுமக்கள் அவதியை சந்தித்தனர்.அது மட்டுமின்றி, சேலம் கோட்டத்தில் உள்ள புதிய புறநகர் பஸ்கள், மாநாட்டுக்கு திருப்பி விடப்பட்டதால், 60 கி.மீ., துாரத்துக்கு உட்பட்ட வழித்தடங்களில், பாடாவதி டவுன் பஸ்கள் இயக்கப்பட்டன. இதனால், பயண நேரம் அதிகரித்து பயணிகள் கடும் அவதியை சந்தித்தனர்.சேலம், தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரியில் இருந்து, மதுரை, திருச்சி, கோவை, ஈரோடு, திருப்பூர், திருவண்ணாமலை, வேலுாருக்கு வழக்கமாக இயங்கும் பஸ்கள், மாநாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.இதன் காரணமாக இந்த நகரங்களில் இருந்து வெளியூர் செல்ல வேண்டிய பயணிகள் ஒரே பஸ்சில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதோடு, மாறி மாறி பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டதால், வெளியூர் பயணிகள் கடும் அவதியை சந்தித்தனர்.