சேலம்: சேலத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், அ.தி.மு.க.,-போலீசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.கள்ளக்குறிச்சி கருணாபுரம் கள்ளச்சாராய பலிக்கு பொறுப்பேற்று, முதல்வர் ஸ்டாலின் ராஜினாமா செய்ய வலியுறுத்தி, அ.தி.மு.க., சார்பில் நேற்று சேலம் கோட்டை மைதானத்தில் ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதித்த போலீசார், கொடி, ஒலி பெருக்கி, மேடை பயன்படுத்த தடை விதித்தனர். அதனால், மேடை அமைக்க கொண்டு வரப்பட்ட லாரியை அங்கிருந்து அப்புறப்படுத்த நெருக்கடி கொடுத்து அதன் டிரைவரை, போலீசார் விசாரணைக்கு அழைத்தனர். ஆவேசமடைந்த கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, போலீசாரை கண்டித்து கோஷமிட்டதால், போலீசார் - கட்சியினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஒருவழியாக லாரியை அப்புறப்படுத்தியதும், கட்சியினர் ஆர்ப்பாட்ட பேனரை பிடித்தபடி இருக்க, மாநகர் மாவட்ட செயலர் வெங்கடாசலம், புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன் ஆகியோர் தலைமை வகித்தனர்.முன்னாள் அமைச்சர் செம்மலை பேசியதாவது: ஆளும் கட்சியின் கைப்பாவையாக போலீசார் மாறிவிடக்கூடாது. ஏனெனில், கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டரின் நிலைமை நன்கு தெரியும். ஆளும் கட்சியின் பேச்சை கேட்டு, ஒருவர் வலிப்பு நோயாலும், இன்னொருவர் வயிற்று போக்காலும் இறந்துவிட்டார் என தவறுதலாக கூறியதால், 57 பேர் உயிரிழந்துள்ளனர். 10 பேருக்கு பார்வை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்துக்கு முதல்வர் பொறுப்பேற்க வேண்டாமா? மதுவிலக்கு, போதையில்லா மாநிலமாக தமிழகம் மாறும் என, தேர்தலின் போது வாக்குறுதி கொடுத்தார். டாஸ்மாக் மதுவால் இளம் விதவைகள் அதிகமாகிவிட்டனர் என கனிமொழி கூறினார். ஆனால் இன்றைக்கு, 50க்கும் மேற்பட்ட பெண்கள் விதவைகளாகி விட்டனர். இதற்கு யார் பொறுப்பேற்பது.சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமியை பேச அனுமதித்திருந்தால், மதுவை ஒழிக்க ஆலோசனை வழங்கியிருப்பார். அவர், முதல் ஆளாக கள்ளக்குறிச்சி சென்று, இறந்தவர்களின் உடலுக்கு மரியாதை செலுத்தினார். பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து பேசி, அவர்களது குடும்பங்களுக்கு ஆறுதல் கூறினார். ஆனால், இதுவரை அங்கு முதல்வர் செல்லவில்லை. சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்தால் தீர்வு கிடைக்காது. கள்ளச்சாராய பலி வழக்கை சி.பி.ஐ., வசம் ஒப்படைக்க வேண்டும்.இவ்வாறு பேசினார்.எம்பி., சந்திரசேகரன், முன்னாள் எம்.பி., பன்னீர்செல்வம், எம்.எல்.ஏ.,க்கள் பாலசுப்ரமணியம், மணி, ராஜமுத்து, சித்ரா, ஜெயசங்கரன், நல்லதம்பி, சுந்தரராஜன், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் எம்.கே.செல்வராஜ், சக்திவேல், ரவிச்சந்திரன், மனோன்மணி, வெற்றிவேல் உள்பட கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.