சேலம்:சேலம் புது பஸ் ஸ்டாண்ட் அருகில், 50 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட சுற்றுச்சூழல் அரங்கு, பயன்பாட்டுக்கு கொண்டு வராததால், புதர் மண்டி வீணடிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய மானியத்தின் கீழ், சேலம் மாநகராட்சி புது பஸ் ஸ்டாண்டு அருகில், 2,000 சதுரடி பரப்பில், 50 லட்சம் மதிப்பில் 'அம்மா சுற்றுச்சூழல் அரங்கு' கடந்த, 2019ல் திறக்கப்பட்டது. இதில் குகை போன்ற அமைப்பு, சிங்கம், புலி, மான் உள்ளிட்ட உருவங்கள் அமைக்கப்பட்டிருந்தன. தரம் குறைந்த அட்டைகளில் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு, 10 லட்சம் ரூபாய் கூட செலவாகியிருக்காது என கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள், ஊழல் புகார் எழுப்பியது.திறக்கப்பட்ட சில நாட்களில் மீண்டும் பராமரிப்பு என மூடப்பட்டது. அதை தொடர்ந்து கொரோனா லாக்டவுன் காரணமாக நிரந்தரமாக மூடப்பட்டது. அதன் பின், தற்போது வரை பயன்பாட்டுக்கு கொண்டு வரவில்லை. பல ஆண்டுகளாக பூட்டப்பட்டு, பராமரிப்பின்றி கிடப்பதால், அங்கு புதர் மண்டி உள்ளது.இதுகுறித்து மாநகராட்சி அலுவலர் ஒருவர் கூறியதாவது:மாநகராட்சி பஸ் ஸ்டாண்டில் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளே பற்றாக்குறையாக உள்ளன. இந்நிலையில், 2,000 சதுரடி நிலத்தை ஆக்கிரமித்து அரங்கம் திறக்கப்பட்டது. லாக்டவுனுக்கு பின், மக்கள் பயன்பாட்டுக்கு வரும் முன்பே ஆட்சி மாறிவிட்டது. அதன் பின் யாரும் கண்டுகொள்ளவில்லை. 50 லட்சம் வீணடிக்கப்பட்டது குறித்து விசாரணையும் நடத்தப்படவில்லை. அதை அகற்றிவிட்டு, கழிப்பறை கட்டினால்கூட, பயணிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.இவ்வாறு கூறினார்.