உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மின்வாரிய அலுவலர்கள் சிறை பிடிப்பு5 மணி நேரத்துக்கு பின் போலீஸ் மீட்பு

மின்வாரிய அலுவலர்கள் சிறை பிடிப்பு5 மணி நேரத்துக்கு பின் போலீஸ் மீட்பு

நங்கவள்ளி: மின்திருட்டை கண்டுபிடித்து அபராதம் விதிக்க சென்ற மின்வாரிய அலுவலர்களை, நெசவாளர்கள் சிறைபிடித்தனர். ஐந்து மணிநேரத்துக்கு பின் சிறைவைத்த அலுவலர்களை போலீஸார் மீட்டனர்.சேலம் மாவட்டம், நங்கவள்ளி ஒன்றியம், சூரப்பள்ளி அருகே உள்ளது கோல்காரனூர் கிராமம். கோல்காரனூர் சுற்றுப்பகுதியில் ஏராளமான கைத்தறி, விசைத்தறி நெசவு கூடம் உள்ளது. இப்பகுதியில் தறிகளுக்கு வழங்கும் இலவச மின்சாரத்தை நெசவாளர்கள் சிலர், முறைகேடாக உபயோகிப்பதாக மின்வாரியத்துக்கு புகார் சென்றது.நேற்று காலை, ஓமலூர் மின்வாரிய செயற்பொறியாளர் கல்யாண சுந்தரம் தலைமையில், 15 மின்வாரிய அலுவலர்கள், மின்திருட்டு கண்டுபிடித்து நடவடிக்கை எடுப்பதற்காக கோல்காரனூர் கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது நெசவாளர்கள் சிலர், மின்சாரத்தை முறைகேடாக பயன்படுத்துவது தெரியவந்தது. முறைகேடு தொடர்பாக முருகேசன், தங்கராஜ் உள்பட, ஏழு பேருக்கு, 50 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதித்தனர். அபராத தொகையை உடனடியாக செலுத்த வேண்டும் எனவும் கூறினர்.நெசவாளர்களும் அபராத தொகையை செலுத்தினர். எனினும், அடிக்கடி ஏற்படும் மின்தடையால் நெசவு தொழில் முடங்கிய நிலையில், முறைகேடு எனக்கூறி மின்வாரிய அதிகாரிகள் அபராதம் விதித்தது, அப்பகுதி நெசவாளர்களை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியது.விரக்தியடைந்த நெசவாளர்கள், 300க்கும் மேற்பட்டோர் அப்பகுதியில் கூடி அங்கிருந்து புறப்பட முயன்ற மின்வாரிய அதிகாரிகளை சிறைபிடித்தனர். மின்தடையால் வேலையிழந்து தவிக்கும் நிலையில், அபராதம் வசூலிக்க மட்டும் எதற்காக வருகிறீர்கள் என, கேட்டு, அதிகாரிகளிடம் தகராறு செய்தனர்.சுற்றுகிராம நெசவாளர்களும் கோல்காரனூர் கிராமத்துக்கு சென்று மின்வாரிய அலுவலர்களை முற்றுகையிட்டனர். இதனால், அப்பகுதியில் திடீர் பதட்டம் ஏற்பட்டது. மின்வாரிய அதிகாரிகள் பலமணிநேரம் பேச்சுவார்த்தை நடத்தியும் நெசவாளர்கள் விடுவிக்க மறுத்து விட்டனர்.தகவல் அறிந்த ஜலகண்டபுரம் இன்ஸ்பெக்டர் சக்ரபாணி மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று, இரு தரப்பினரிடம் பேசி, மின்வாரிய அலுவலர்களை விடுவித்தனர். மின்வாரிய அலுவலர்கள் ஐந்துமணிநேரம் நெசவாளர்கள் சிறைபிடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி