ஓமலுார் : சேலம் லோக்சபா தொகுதி, ஓமலுார் சட்டசபை தொகுதி, அ.தி.மு.க., செயல்வீரர் கூட்டம், நடராஜ் செட்டியார் மண்டபத்தில் நேற்று நடந்தது. ஓமலுார் எம்.எல்.ஏ., மணி தலைமை வகித்தார். அதில் சேலம் லோக்சபா தொகுதி வேட்பாளர் விக்னேஷை அறிமுகப்படுத்தி, சேலம் புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன் பேசியதாவது: சேலம் லோக்சபா தேர்தலில், பொதுச்செயலர் இ.பி.எஸ்., வேட்பாளராக நிற்பதாக கருதி, விக்னேஷூக்கு அனைவரும் தீவிரமாக தேர்தல் பணியாற்றி அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்ய வேண்டும். வரும், 15 நாட்களில், கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் மக்களை நேரடியாக சந்தித்தும், திண்ணை பிரசாரம் மேற்கொண்டும் ஓட்டு சேகரிக்க வேண்டும்.இந்த தேர்தல் தர்மத்துக்கும், அதர்மத்துக்கும் இடையே நடைபெறுவது. கட்சியில் துரோகிகளும் எட்டப்பன்களும் இருக்கக்கூடாது என்பதற்கு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அப்போதே செல்வகணபதியை கட்சியை விட்டு நீக்கினார். தற்போது துரோகியான தி.மு.க., வேட்பாளர் செல்வகணபதியை, டிபாசிட் இழக்க செய்ய வேண்டும். அனைவரும் ஒருமித்த கருத்துடன் தேர்தல் பணியாற்ற வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.இளைஞர் பாசறை மாநில செயலர் பரமசிவம், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் கிருஷ்ணன், வெற்றிவேல், ஒன்றிய செயலர்கள், நகர செயலர்கள், கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர்.இதையடுத்து மாலையில், இடைப்பாடி சட்டசபை தொகுதி செயல் வீரர்கள் கூட்டம், தாரமங்கலம் அருகே ஆரூர்பட்டியில் நடந்தது. மாநில பொதுக்குழு உறுப்பினர் வெங்கடேஷ் தலைமை வகித்தார். அதில் இளைஞர், இளம்பெண் பாசறை மாநில செயலர் பரமசிவம் பேசியதாவது:வன்னியருக்கு, 10.5 சதவீதம் வழங்கிய, அ.தி.மு.க.,வை விட்டுவிட்டு, பா.ஜ.,வோடு பா.ம.க., கூட்டணி சேர்ந்துள்ளது. அதற்கான நிர்பந்தம் என்னவென்று அக்கட்சியினர் உள்ளிட்ட அனைவருக்கும் தெரியும். அந்த அதிருப்தியில் உள்ளவர்களை நாம் சந்தித்து ஓட்டுகளாக மாற்ற வேண்டும். ஜெயலலிதாவால் அறிமுகப்படுத்தப்பட்ட செல்வகணபதியை, அ.தி.மு.க., தொண்டர்கள் மழையிலும், வெயிலிலும் வேர்வை சிந்தி உழைத்து அமைச்சராக உயர்த்தினர். அதை அவர் கண்டுகொள்ளவில்லை. அதனால் விக்னேஷை அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.இதில் இடைப்பாடி தொகுதிக்குட்பட்ட ஒன்றிய செயலர்கள், நகர செயலர்கள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.