ரிசர்வ் வங்கி பெயரில் மோசடி அரசு அலுவலக டிரைவர் கைது
சேலம், இந்திய ரிசர்வ் வங்கி சார்பில் இரிடியம், காப்பர் விற்கப்படுவதாகவும், அதை வாங்கி விற்றால் கூடுதல் பணம் கிடைக்கும் என கூறி, அதற்கு சேவை கட்டணம், அதிகாரிகளுக்கு கமிஷன் என, பல கோடி ரூபாய் மோசடி நடந்ததாக, ரிசர்வ் வங்கி உதவி பொதுமேலாளர் கென்னடி புகார் அளித்தார்.இதுதொடர்பாக, சேலம் சி.பி.சி.ஐ.டி., போலீசார் வழக்குப்பதிந்து, சேலம், தஞ்சாவூர், தர்மபுரி உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த, 13 பேரை கைது செய்தனர். மேலும் பலரை தேடி வந்தனர்.இந்நிலையில் இரு மாதங்களாக தேடப்பட்டு வந்த, மேட்டூர் உதவி வேளாண் இயக்குனர் அலுவலகத்தில் அரசு டிரைவராக இருந்த விஜயகணேசன், 42, என்பவரை, நேற்று சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரது வீட்டில் நடத்திய சோதனையில், ரிசர்வ் வங்கி முத்திரை பதித்த பல்வேறு ஆவணங்களை பறிமுதல் செய்தனர். மேலும் இந்த வழக்கில் இதுவரை, 200க்கும் மேற்பட்டோரிடம், 30 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்யப்பட்டுள்ளது, விசாரணையில் தெரியவந்துள்ளது.