| ADDED : ஏப் 17, 2024 12:43 PM
ஆத்துார்: கள்ளக்குறிச்சி தொகுதியில் விதிமீறல் அதிகரிப்பால் தேர்தலை நிறுத்தக்கோரி சுயேச்சை புகார் மனு அனுப்பியுள்ளார்.சேலம் மாவட்டம் நரசிங்கபுரம், அரங்கபாலா நகரை சேர்ந்தவர் கோவிந்தராஜ், 72. கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுகிறார். இவர் நேற்று, தலைமை தேர்தல் கமிஷனர் சத்யபிரதா சாஹூவுக்கு, மின்னஞ்சலில் அனுப்பிய புகார் மனு:கள்ளக்குறிச்சி தொகுதியில் அரசியல் கட்சியினர் நடத்திய கூட்டங்களுக்கு, 70 முதல், 100 வாகனங்கள் பயன்படுத்தியதை, தேர்தல் அலுவலர்கள் பதிவு செய்துள்ளனர். ஆனால் ஆட்களை ஏற்றி வந்த வாகனங்களுக்கு அனுமதி பெறவில்லை. தலைவாசலில் இருந்து கெங்கவல்லியில் நடந்த, தி.மு.க., கூட்டத்துக்கு, ஆட்களை ஏற்றிச்சென்ற வாகனம், ஏரிக்கரையில் கவிழ்ந்து, 2 பேர் பலியாகினர். 21 பேர் காயம் அடைந்தனர். இதற்கும் நடவடிக்கை இல்லை.கட்சி கூட்டத்துக்கு கொடிகள் கட்டியபடி ஆட்களை ஏற்றிச்செல்லும் வாகனங்களை கண்டுகொள்ளவில்லை. ஆட்களுக்கு ஏற்ப பணம், பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. தேர்தல் கமிஷன் முறையாக செயல்படவில்லை. ஓட்டு கேட்கவும், அளவுமீறி ஆட்களை அழைத்துச்செல்கின்றனர்.தேர்தல் விதிகள் முறையாக பின்பற்றப்படவில்லை. விதிமீறல் அதிகளவில் உள்ளது குறித்து பலமுறை புகார் செய்தும் பலனில்லை. கள்ளக்குறிச்சியில் தேர்தலை நிறுத்தி வைக்க வேண்டும்.ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., உள்ளிட்ட அதிகாரிகள் தான் ஊழலுக்கு காரணம் என, துண்டு பிரசுரம் வினியோகித்ததால், என் உயிருக்கு ஆபத்து உள்ளது. அப்படி ஏதும் நேர்ந்தால் கமிஷன் தான் பொறுப்பு. எனக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இவர் கடந்த, 10ல் ஆத்துார், கெங்கவல்லி உள்ளிட்ட தொகுதிகளில், 'எனக்கு யாரும் ஓட்டுப்போட வேண்டாம்; நல்லவருக்கு ஓட்டுப்போடுங்கள்' என துண்டு பிரசுரம் வினியோகித்தார்.