ஓமலுார்: தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க, சேலம் மாவட்ட மாநாடு, ஓமலுாரில் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் வைத்தியநாதன் தலைமை வகித்தார். அதில், சத்துணவு ஊழியர் ஓய்வு பெறும்போது, 5 லட்சம் ரூபாய், சமையல் உதவியாளருக்கு, 3 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும்; ஓய்வு பெற்ற சமையலருக்கு மருத்துவப்படி, மருத்துவ காப்பீடு, ஈமச்சடங்கு நிதி, 25,000 ரூபாய் வழங்குதல் என்பன உள்பட, 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக மாநாட்டு பேரணியை மண்டபம் முன், பொதுச்செயலர் நுார்ஜஹான் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.தொடர்ந்து அவர் அளித்த பேட்டி: காலியாக உள்ள அரசு பணியிடங்களில் பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு அளித்தல்; ஓய்வூதியம் குறைந்தபட்சம், 6,750 ரூபாய் வழங்குதல்; காலை உணவு திட்டத்தை சத்துணவு திட்டத்தில் இணைத்தல்; மீண்டும் ஆண் வாரிசுதாரர்களுக்கு பணி வழங்குதல்; சத்துணவு ஊழியர்களுக்கு, 12 மாத மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும். அக்., 18, 19ல் விருதுநகரில் பிரதிநிதி, பொது மாநாடு நடக்க உள்ளது. அதில் அமைச்சர்கள் கீதாஜீவன், தங்கம் தென்னரசு, ராமச்சந்திரன் ஆகியோரை அழைத்து, அவர்கள் மூலம், எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றித்தரும் விதமாக, முதல்வர் ஸ்டாலினை அழைக்கவுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.மாநாட்டில் மாநில தலைவர் சந்திரசேகரன், செயலர் பிரகலதா, மாவட்ட செயலர் தங்கமணி உள்ளிட்ட நிர்வாகிகள், ஊழியர்கள் பங்கேற்றனர்.