உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வாழப்பாடி அரசு மருத்துவமனையில் பிணவறை கூடம் செயல்படாத அவலம்

வாழப்பாடி அரசு மருத்துவமனையில் பிணவறை கூடம் செயல்படாத அவலம்

வாழப்பாடி: வாழப்பாடியில் உள்ள தாலுகா அரசு மருத்துவமனை, மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையமாக செயல்பட்டு, 2015ல், 60 படுக்கை வசதிகளுடன் தரம் உயர்த்தப்பட்டது. எனினும் பழைய கட்டடத்தில் இடவசதியின்றி நோயாளிகள் அவதிப்பட்டனர். இதனால், 80 லட்சம் ரூபாய் மதிப்பில், 30 படுக்கைகளுக்கு மட்டும் புது கட்டடம் கட்டப்பட்டு, 2017 மார்ச், 7ல் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. தற்போது வெளி நோயாளியாக, 500 - 600 பேர், உள் நோயாளியாக, 45 - 50 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.பொது மருத்துவம், நுரையீரல், குழந்தைகள், மகப்பேறு, மயக்கவியல், காது, மூக்கு, தொண்டை, பொது அறுவை சிகிச்சை பிரிவுகள், ஒரு அறுவை அரங்கம் உள்ளன. பிணவறை கூடம், அவசர சிகிச்சை பிரிவு, ரத்த வங்கி உள்ளிட்ட வசதிகள் இல்லாததால், தாலுகா மருத்துவமனை பெயரளவில் செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் வாழப்பாடியை சேர்ந்த, தி.மு.க., முன்னாள் கவுன்சிலர் கமல்ராஜா, குறைந்தபட்சம் பிணவறை வசதியையாவது ஏற்படுத்த, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.இதையடுத்து, 60 லட்சம் ரூபாய் மதிப்பில் பிணவறை கூடம் அமைக்கப்பட்டு, அதில், 6 உடல்கள் வரை பாதுகாக்க, 'ப்ரீசர்' உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டு பயன்பாடுக்கு வந்த அதே வேகத்தில் மூடப்பட்டன. இதற்கு போதிய மருத்துவர், பணியாளர்கள் இல்லாததே காரணம் என, மருத்துவர்கள் கூறினர்.இதனால் சந்தேக மரணம், பல்வகை விபத்து மரணம், தற்கொலை மரணம், மர்ம மரணம், கொலை ஆனவர்களின் உடல்களை, உடற்கூறு ஆய்வுக்கு, ஆத்துார் அல்லது சேலத்துக்கு எடுத்துச்செல்வதால் இறந்தவர்களின் குடும்பத்தினர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதனால் பிணவறை கூடத்தை செயல்படுத்த வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை