குளித்தலை: குளித்தலை கடம்பவனேஸ்வரர் கோவில், வான் பொய்யினும் தான் பொய்யா வற்றாத காவிரி நதிக்கரையின், தென்கரையில் குபேரதிசையான வடக்கு திசை நோக்கி, காசிக்கு நிகராக சிறப்பு பெற்று அமைந்துள்ளது. மேலும், மாணிக்கவாசகர், அப்பர், திருநாவுக்கரசரால் பாடப்பட்ட புகழ்பெற்ற ஸ்தலமாகும். பல்வேறு புராதன வரலாறுகளை கொண்ட இக்கோவிலில், தைப்பூச திருவிழாவையொட்டி, ஆண்டுதோறும் எட்டு திசைகளில் உள்ள எட்டு ஊர் சிவாலயங்களின் சோமாஸ்கந்தர் அம்பாளுடன், ரிஷப வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.அதன்படி, குளித்தலை, கருப்பத்துார், ராஜேந்திரம், அய்யர்மலை மற்றும் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த திருஈங்கோய்மலை, முசிறி, வெள்ளூர், பெட்டவாய்த்தலை சிவாலயங்களில் சோமாஸ் கந்தர்கள், அம்பாளுடன் ரிஷப வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் ஊர்வலமாக வந்து காவிரி ஆற்றங்கரையில் எழுந்தருளினர்.தொடர்ந்து, நேற்று முன்தினம் இரவு, 8:30 மணிக்கு, சூலதேவர்கள் காவிரி ஆற்றில் மூழ்கி தீர்த்தவாரி கண்டனர். முன்னதாக, கடம்பர் கோவில் மேற்கு மடவாள பகுதியில் சோமாஸ்கந்தர்கள் சந்திப்பு நிகழ்ச்சியும், குளித்தலை கடம்பவனேஸ்வரர் அனைத்து ஊர் சோமாஸ்கந்தர்களை வரவேற்கும் நிகழ்ச்சியும் நடந்தது. தீர்த்தவாரி கண்ட பின், எட்டு ஊர் சோமஸ் கந்தர்கள் அம்பாளுடன் ரிஷப வாகனத்தில் ஒரே இடத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். ஆயிரக்கணக்கானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.