ஏற்காடு: ஏற்காடு நாகலுார் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, முழுவி மலை கிராமத்தில் சேலம், திருப்பூர், தர்மபுரி, திண்டுக்கல், கோவை, தேனி, திருநெல்வேலி, வேலுார், விழுப்புரம் மற்றும் திருச்சி ஆகிய 10 மாவட்டங்களில் உள்ள மலை கிராமங்களில் வசிக்கும், பழங்குடியினருகான நடமாடும் சித்த மருத்துவ குழு வாகனத்தை, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் நேற்று காணொலி மூலம் தொடங்கி வைத்தார்.இந்த திட்டத்திற்கு ஒரு மாவட்டத்திற்கு, 9.4 லட்சம் என, 10 மாவட்டத்திற்கு ஆண்டுக்கு, 94 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பின் அமைச்சர் சுப்பிரமணியன் பேசியதாவது:சித்த மருத்துவர், சித்த மருந்தாளுநர் என இருவர் பணிபுரிவர். இந்த வாகனம் மலை கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு, நேரில் சென்று மருத்துவம் பார்ப்பர்.நாகலுார் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சராசரியாக நாள் ஒன்றுக்கு, 91 நோயாளிகள் ஆங்கில மருத்துவம் மூலம் பயன் பெறுவதாகவும், அதே பகுதியில் உள்ள சித்த மருத்துவமனையில், 62 நோயாளிகள் பயன் பெற்று வருகின்றனர். தற்போது தொடங்கப்பட்ட நடமாடும் மருத்துவ வாகனம், ஏற்காடு கிராம் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.இவ்வாறு பேசினார்.மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி, இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையின் ஆணையர் மைதிலி ராஜேந்திரன், சேலம் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ., ராஜேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.