உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / லோக்சபா தேர்தல் நேர கவர்ச்சி அறிவிப்பு

லோக்சபா தேர்தல் நேர கவர்ச்சி அறிவிப்பு

சேலம்: தேர்தல் வருவதால், பல்வேறு கவர்ச்சியான அறிவிப்புகளை கொண்ட பட்ஜெட்டாக, தமிழக பட்ஜெட் உள்ளது என, சேலம் முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.சேலம், பட்டய கணக்காளர் சங்க முன்னாள் தலைவர் ரவீந்திரன்: தமிழ்நாடு அரசு கல்விக்கடன் வழங்குவதாக அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. இதன் மூலம், உயர்கல்வி படிப்போரின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. தொழில் நிறுவனங்களுக்கு இன்னும் முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம். 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு என அறிவித்திருந்தாலும், தொழில்துறையை மேம்படுத்தினால்தான், கூடுதல் வேலைவாய்ப்புக்கு சாத்தியமாகும். சமீப காலமாக, தொழில் துறையில் நிலவும் பல்வேறு நெருக்கடிகளால், சிறு, குறு தொழிற்சாலைகள் மூடப்பட்டு வருவது கவலை அளிக்கிறது.தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, மாவட்ட தலைவர் பெரியசாமி: பட்ஜெட்டில், பெரும்பாலானோர் வரவேற்கும் விதத்தில், பல கவர்ச்சிகரமான அறிவிப்புகள் உள்ளன. ஆனால் இலவச அறிவிப்பு, கூடுதல் நலத்திட்டங்கள் என அதற்கான சுமை முழுவதும் வணிகர்கள் மேல் சுமத்தப்படுகிறது. மின் கட்டணம் உயர்வு, தொழில் வரி, குப்பை வரி என அனைத்து வரியினங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து, வணிகர்களை நெருக்கடியில் ஆழ்த்துகிறது. அதை குறைக்கும் வகையிலான அறிவிப்பு இல்லாததது ஏமாற்றத்தை அளிக்கிறது.முன்னாள் ரயில்வே ஆலோசனைக்குழு உறுப்பினர். செல்வராஜ்: தமிழகத்தில் வயது வித்தியாசமில்லாமல், சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைத்து தரப்பினருக்கும் சாதகமான திட்டங்களும், அறிவிப்புகளும் இடம் பெற்றுள்ளன. ஆனால், மின் கட்டண உயர்வு, சிறு கடைகள், தொழில் நிறுவனங்களுக்கு சுமையாக உள்ளன. அவற்றை குறைக்க நடவடிக்கை எடுத்திருக்கலாம். மற்றபடி, தேர்தல் நேரத்தில் மக்களை கவரும் வகையில், பட்ஜெட்டில் அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன.வக்கீல் ராஜப்பிரியா: தமிழகத்தில், 500க்கும் மேற்பட்ட பெண்கள், மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவர்களை பணியில் அமர்த்தும், புதிய தொழில் நிறுவனங்களுக்கு, ஊதிய மானியம் வழங்கப்படுவதாக அறிவித்துள்ளனர். இது பெண்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் வேலைவாய்ப்பை அதிகரிக்கும். அதே போல், பெண்களுக்கான விடுதி துவங்குவதும் வரவேற்கத்தக்கது. உயர்கல்விக்கு கூடுதல் நிதி ஒதுக்கியிருந்தாலும், அதில் சட்டக்கல்விக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும்.வரி ஆலோசகர், சக்திவேல்: மத்திய அரசு பணிகளுக்கான எஸ்.எஸ்.சி., ஆர்.ஆர்.பி., உள்ளிட்ட தேர்வுகளில், தமிழகத்திலிருந்து பங்கேற்று தேர்ச்சி பெறுவோரின் எண்ணிக்கை மிக குறைவாக உள்ளது. அதனால்தான், தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் கூட, தமிழ் தெரியாத வட இந்தியர்கள் அதிகரித்து வருகின்றனர். இத்தேர்வுகளுக்கு பயிற்சி வழங்க, சென்னை, கோவை, மதுரை ஆகிய இடங்களில், ஆறு மாத உறைவிட பயிற்சி மையம் அமைக்கப்பட உள்ளதாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு வரவேற்கத்தக்கது. ஏராளமான அறிவிப்புகள் வந்துள்ளதால், இருக்கும் நிதிநிலையில், இவையனைத்தும் நிறைவேற்றப்படுமா என்ற சந்தேகமும் எழுகிறது.ஜவுளி உற்பத்தியாளர், அண்ணாமலை: இலவச திட்டங்கள், புதிய திட்டங்கள் என ஏராளமானவை அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால், அதற்கான வருவாய் எங்கிருந்து கிடைக்கும் என்பது தெரியவில்லை. வரி வருவாயை அதிகரிக்காமல், இலவச திட்டங்களை அதிகரித்து கொண்டே செல்வதால், கடன் சுமை ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகிறது. இவை மறைமுகமாக தொழில் நடத்துவோர், பொதுமக்கள் மீதே, பல்வேறு வரியாக சுமத்தப்படும் அபாயம் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை