| ADDED : மே 09, 2024 06:48 AM
தலைவாசல் : சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே வேப்பநத்தத்தை சேர்ந்தவர் வடிவேல், 44. தலைவாசல், 'டாஸ்மாக்' கடையில் மேற்பார்வையாளராக உள்ளார். நேற்று முன்தினம் மதியம், 3:00 மணிக்கு மதிய உணவுக்கு, பட்டுத்துறை வழியே, 'ஸ்பிளண்டர்' பைக்கில் சென்றுகொண்டிருந்தார். ரயில்வே பாலம் அருகே வந்தபோது, 'மாருதி' கார், வடிவேல் ஓட்டிச்சென்ற பைக் மீது மோதியது. இதில் காயம் அடைந்த வடிவேலை, காரில் வந்த தமிழ்செல்வன் உள்ளிட்டோர் தாக்கியுள்ளனர். அதே வழியே, மற்றொரு பைக்கில் வந்த, வடிவேலின் உறவினர் அன்பரசன், தாக்குதல் குறித்து கேட்டபோது அவரையும் தாக்கினர். வடிவேல், அன்பரசன், ஆத்துார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.வடிவேல் புகாரில், 'பட்டுத்துறையை சேர்ந்த தமிழ்செல்வன், சில நாட்களுக்கு முன், டாஸ்மாக் கடையில் ஊழியர் அழகேசனிடம் தகராறு செய்தார். அதை தட்டிக்கேட்டபோது, என்னிடம் வாக்குவாதம் செய்தார். அவர், என் மீது காரை ஏற்றி கொல்ல முயன்றதோடு, சிலரை அழைத்து வந்து தாக்குதலில் ஈடுபட்டார்' என கூறியுள்ளார். இதனால் தாக்கியவர்களை, போலீசார் தேடுகின்றனர்.