| ADDED : ஜூலை 10, 2024 07:12 AM
பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி ஒன்றியத்தில் உள்ள தும்பல்பட்டி, கம்மாளப்பட்டி, குரால்நத்தம் ஆகிய ஊராட்சிகளில் மலைவாழ் மக்கள் அதிகம் வசிக்கின்றனர். கடந்த ஆண்டு ஆகஸ்டில், தும்பல்பட்டி மலைவாழ் மக்கள் பல்நோக்கு கூட்டுறவு சங்கம் தொடங்கி, ஊராட்சி அலுவலகத்தின் ஒரு அறையில் செயல்படுகிறது. தனி அலுவலர் கட்டுப்பாட்டில் உள்ள அச்சங்கத்தில், 1,000க்கும் மேற்பட்டோர் உறுப்பினராக சேர்ந்துள்ளனர். ச.ஆ.பெரமனுார் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க செயலர், மலைவாழ் மக்கள் பல்நோக்கு கூட்டுறவு சங்க பணியை, கூடுதலாக கவனித்து வருகிறார்.இதுகுறித்து தும்பல்பட்டி மலைவாழ் மக்கள் பல்நோக்கு கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் கூறியதாவது:எங்கள் சங்கம் தொடங்கி ஓராண்டாகியும் இதுவரை தனியே செயலர் நியமிக்கப்படவில்லை. காசாளர், உதவியாளர் உள்பட எந்த பணியாளரும் இல்லை. பெரும்பாலான நாட்கள் அலுவலகம் பூட்டியே உள்ளது. இதனால் உறுப்பினர் சேர்க்கை, கடன் வழங்கல், திருப்பி செலுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் தொய்வடைந்து சங்க வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் சங்கத்துக்கு செயலர், பணியாளர்கள் நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.