| ADDED : பிப் 07, 2024 10:29 AM
ஓமலுார்: அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., மீது களங்கம் ஏற்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க, மக்கள் போலீசில் புகார் அளித்தனர்.சேலம் மாவட்டம் ஓமலுார் அருகே பெரியேரிப்பட்டி ஊராட்சி வேடப்பட்டியை சேர்ந்தவர் குப்புசாமி, 76. இவர் குடும்பத்தினருடன், நேற்று முன்தினம் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனு:என் குடியிருப்பு அருகே வீடு கட்ட நிலத்தை சமன்படுத்தியபோது அப்பகுதியை சேர்ந்த ராஜமாணிக்கம், சின்னமுத்து உள்பட சிலர் எதிர்ப்பு தெரிவித்து தாக்க முயன்றனர். இதுகுறித்து தொளசம்பட்டி போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. அ.தி.மு.க.,வை சேர்ந்த ஓமலுார் எம்.எல்.ஏ., மணி, அவரது தந்தையான ஊராட்சி தலைவர் ராமசாமி ஆகியோரது துாண்டுதலால் இச்சம்பவம் ஏற்பட்டது. இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறியிருந்தார்.இதையடுத்து வேடப்பட்டி வி.ஏ.ஓ., வரதராஜன், தொளசம்பட்டி போலீசில் அளித்த மனு:சம்பவ இடத்தை, ஓமலுார் வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட வருவாய்த்துறையினர் பார்வையிட்டு, நிலத்தை அளவீடு செய்ததில் புறம்போக்கு நிலம் என தெரிந்தது. இதனால் அங்கிருந்த முட்டு கல்லை அகற்ற முயன்றபோது குப்புசாமி அவரது மகன் அழகேசன் பணியை தடுத்து மிரட்டினர்.இவ்வாறு அதில் கூறியிருந்தார்.இதனால் குப்புசாமி, அழகேசன் மீது போலீசார் வழக்குப்பதிந்தனர்.இந்நிலையில் நேற்று வேடப்பட்டியை சேர்ந்த, 20க்கும் மேற்பட்ட மக்கள், தொளசம்பட்டி போலீசில் புகார் அளித்தனர். அதில், 'புறம்போக்கு நிலத்தை ஆக்கிரத்தவர்கள், எம்.எல்.ஏ., மணி மீது பொய் புகாரை ஏற்படுத்தி அவர் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கூறியிருந்தனர்.