பனமரத்துப்பட்டி:பனமரத்துப்பட்டி
வட்டாரத்தில், 800 ஹெக்டேரில் அரளி உற்பத்தியாகிறது. தினமும்
அறுவடை செய்யப்படும், 25 டன் அரளி தமிழகம் மட்டுமின்றி
வெளிமாநிலங்களுக்கும் விற்பனைக்கு செல்கிறது. அதிகாலை, 2:00
முதல், காலை 7:00 மணிக்குள் செடியில் இருந்து அரளி மொக்கு பறிக்க
வேண்டும். அத்தொழிலில், 20,000க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள்
ஈடுபட்டு வருகின்றனர். ஆரம்ப காலத்தில் ஒரு கிலோ அரளி பறிக்க, 10
ரூபாய் கூலி வழங்கப்பட்டது. ஆட்கள் பற்றாக்குறையால் கூலி உயர்ந்து
கிலோவுக்கு, 40 ரூபாய் வழங்கப்பட்டது.இதுதவிர தொழிலாளர்களை
வாகனத்தில் அழைத்து வருதல், டீ, காபி, போண்டா, வடை, சமோசா வாங்கி
கொடுத்தும் கவனித்தனர். ஆனாலும் கூலி ஆட்கள் பற்றாக்குறையால், பல
நாட்கள் செடியில் பறிக்கப்படாமல் அரளி விடப்படுகிறது.கடந்த
வாரம் பனமரத்துப்பட்டி, கோம்பைக்காடு விவசாயி மாயக்கண்ணன், 65,
ஒரு கிலோ அரளி பறிக்க, 60 ரூபாய் கூலி வழங்கப்படும் என, வாகனத்தில்
ஒலிபெருக்கி மூலம் விளம்பரம் செய்தார். ஆனாலும் போதிய கூலி ஆட்கள்
கிடைக்கவில்லை. இதுகுறித்து அடிக்கரை விவசாயி பாலு, 55,
கோபிகண்ணன், 48, கூறுகையில், ''ஒரு கிலோ அரளி பறிக்க, 80 ரூபாய் கூலி,
தீபாவளி போனஸ், ஊக்கத்தொகை வழங்குவதாக அறிவித்தும் கூலி ஆட்கள்
கிடைக்கவில்லை,'' என்றனர்.